International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேலில் அமெரிக்கா தனது விமானங்களை குவித்து வருவது தான். விரைவில் ஈரான் மீது மீண்டும் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் Wait and See என்று ஈரான் கடும் வார்னிங்கை கொடுத்துள்ளது. இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதாவது ஈரான் மீதான தாக்குதலுக்கு விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ”ஈரானுக்கு எதிராக விரிவான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக அமெரிக்கா டஜன் கணக்கில் வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது” என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டிரம்ப் வரும் நாட்களில் ஈரானை தாக்க உத்தரவிடலாம் என்று அமெரிக்க, இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் சுமார் 30 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள ரமோன் விமான நிலையத்திலும் 30 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் உள்ளன. இதில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்தே அமெரிக்கா தனது எரிபொருள் நிரப்பும் விமானங்களை இயக்கும். ஏனென்றால் இந்த விமான நிலையம் தான் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தை குறைவாக கொண்டுள்ளது. இதற்கிடையே தான் இன்னும் சில விமானங்களை அங்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் ஈரான், அமெரிக்காவிற்கு கடும் வார்னிங்கை கொடுத்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படை தலைமையகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ” அமெரிக்கப் படைகளின் நடமாட்டத்தையும், ராணுவ உபகரணங்களின் நகர்வுகளை ஈரானின் கடற்படை பிரிவு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை துண்டிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் கட்டளை மையமான CENTCOM தான் கடற்படை பிரிவுக்கு எதிராக ஈரானின் ஆயுதப்படைகள் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கையின் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. வெயிட் அண்ட் சீ” என வார்னி்ங செய்துள்ளது.
இப்படி ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.