பலம் தரும் நரசிம்மர்…நலம் தரும் சரபேஸ்வரர்! – Kumudam

Spread the love

பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி

வலிமையைத் தந்தருளக் கூடியது. நரசிம்ம வழிபாடு. துர்குணம் கொண்டவர்களை அழிக்காமல் விடமாட்டார் மகாவிஷ்ணு என்பதை நாம் அறிவோம். அதேபோல், நற்குணம் கொண்டவர்களை எப்போதும் காத்தருள்வார் மகாவிஷ்ணு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் பல உண்டு என்றாலும் மிக முக்கியமான அவதாரமாகப் போற்றப்படுகிறது நரசிம்ம அவதாரம்.

இரணியனை அழிக்கவும் பிரகலாதனைக் காக்கவுமாக பெருமாள் எடுத்த அவதாரம் என்கிறது விஷ்ணு புராணம். மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில், நரசிம்ம அவதாரம் மட்டுமே மிகக்குறைந்த காலத்தில் நடந்து முடிந்ததாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

காலையும் இல்லாத மாலையும் இல்லாத அந்தி சாயும் நேரம்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. அதேபோல், வீட்டுக்குள்ளேயும் மரணம் நிகழக்கூடாது, வெளியேயும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்று இரணியன் வரம் வாங்கியிருந்தான், அதன்படி, வீட்டுக்குள்ளேயும் அவனுக்கு மரணம் நிகழவில்லை. வெளியேயும் மரணம் நிகழ்த்தவில்லை. வாசலில் இருந்தபடியே மரணத்தை வழங்கினார் நரசிம்மப் பெருமாள்.

அதுமட்டுமா? மனித உடலுடனும் மிருக முகத்துடனும் திருக்காட்சி தந்தார் நரசிம்மர். தூணில் இருந்து பிளந்துவந்து, சிம்மமாக கர்ஜித்து இரணியனை மடியில் கிடத்தி கொன்றொழித்தார் என்கிறது புராணம்.

திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் உள்ள நரசிம்மப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. நரசிம்ம பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருவல்லிக்கேணியில் தை மாத பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடந்துகொண்டிருக்கிற வேளையில் நரசிம்மப் பெருமாளை கண்குளிர தரிசிப்போம்; மனதாரப் பிரார்த்திப்போம்.

நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிற நேரம், மாலை 4.30 முதல் 6 மணி வரை எனும் காலம். சிவாலயங்களில் பிரதோஷ பூஜை என்பது விமரிசையாக நடைபெறும். பிரதோஷ நேரம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம்தான். அதனால்தான் பிரதோஷ நன்னாளில் நரசிம்மரை தரிசிப்பதும் நரசிம்மப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதும் விசேஷமானதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நரசிம்மருக்கு உகந்த நைவேத்தியமாக பானக நைவேத்தியத்தைச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இரணியனை அழித்த பின்னரும் உக்கிரம் தணியாமல் இருந்தாராம் நரசிம்மர். அதனால்தான் குளிரக் குளிர பானகமானதை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் நரசிம்மரை தரிசனம் செய்வதும் மனதார அவரைப் பிரார்த்தனைகள் செய்வதும் மிகுந்த விசேஷமானது என்றும் பானக நைவேத்தியம் செய்தும் துளசி மாலை சார்த்தியும் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வேண்டிக்கொள்வது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்றும் மெய்சிலிர்க்க தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

நரசிம்ம க்ஷேத்திரங்கள் என்றே தனியே அமைந்திருக்கின்றன. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் என்றும் இருக்கின்றன. விழுப்புரம் அருகே ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

மதுரை ஒத்தகடையில் ஆனைமலை நரசிம்மர் ரொம்பவே விசேஷம். ஸ்ரீரங்கத்திலும் நரசிம்மர் அற்புதமாகக் காட்சி தந்தருள்கிறார். செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில், அற்புதமாகவும் சாந்நித்தியத்துடனும் தனிக்கோயிலில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் நரசிம்மப் பெருமாள்.

சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் உள்ள நரசிம்மப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. நரசிம்ம பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருவல்லிக்கேணியில் தை மாத பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடந்துகொண்டிருக்கிற வேளையில் நரசிம்மப் பெருமாளை கண்குளிர தரிசிப்போம்; மனதாரப் பிரார்த்திப்போம்.

நரசிம்ம வழிபாட்டைப் போலவே சரபேஸ்வர வழிபாடு குறித்தும் சிவ வழிபாட்டு நூல்கள் கொண்டாடுகின்றன. சரபேஸ்வர வழிபாடு செய்வது மகத்தானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்குமுமான தொடர்பைப்பார்ப்போம்.

நரசிம்மர் உக்கிரமூர்த்தியாகத் திகழ்ந்தார். அப்படியொரு உக்கிரம் ஏன்? இரண்யன் ஆணவத்துடன் இருந்தான். பிரகலாதனை இழிவாக நடத்தினான். தன்னை எவராலும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் இருந்தான். தனக்கு நிகர் எவருமில்லை என்ற மமதையில் இருந்தான். தானே கடவுள் என்ற ஆணவத்துடன் அட்டூழியங்கள் செய்து வந்தான்.

அப்போது இஷ்டத்துக்கு நிபந்தனைகளுடன் வரங்களைப் பெற்றிருந்தான். எனக்கு மரணம் நேரக்கூடாது. ஒருவேளை மரணம் வந்தால், அது பகலாகவும் இரவாகவும் இல்லாத நேரத்தில் நடக்க வேண்டும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு வரங்களைக் கேட்டுப் பெற்றிருந்தான்.

பின்னர் இரண்யனை வதம் செய்யும் தருணம் வந்தது. பக்த பிரகலாதன், மகாவிஷ்ணுவை அழைத்தான். நாராயணா எனும் பிரகலாதனின் குரலுக்கு ஓடோடி வந்தார் மகாவிஷ்ணு. இந்தமுறை அவர் எடுத்ததுதான் பத்து அவதாரங்களில் ஒன்றாயிற்று. அந்த அவதாரம்… ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அவதாரம்.

கடும் உக்கிரத்துடன் வந்தார். தூணில் இருந்து பிளந்துகொண்டு வந்தார். இரண்யனை அழித்தொழித்தார். இரண்யனை சம்ஹாரம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. கோபம் குறையவில்லை. ஆவேசம் அமைதியடையவில்லை. தேவர்களும் முனிவர்களும் கலங்கிப் போனார்கள். வைகுண்டமே என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் தவித்தது.

எல்லோரும் சிவபெருமானிடம் சென்றார்கள். முறையிட்டார்கள். சிவபெருமானும் தட்சனின் யாகத்தில் தோன்றச் செய்த வீரபத்திரரை அழைத்து, நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும்படி பணித்தார்.

வீரபத்திரர் நரசிம்மரை நெருங்கினார். ஆனால் நரசிம்மரை நெருங்கக்கூட முடியவில்லை. அதேசமயம், அவரின் உக்கிரம் இன்னும் கூடிக்கொண்டே போனது. தவித்துப் போனார் வீரபத்திரர். சிவனாரை நினைத்து தவம் மேற்கொண்டார். சிவபெருமான் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். ‘என்னால் நரசிம்மரின் சினம் தணிக்க முடியவில்லை’ என வருந்தினான். மன்னிப்புக் கேட்டான்.

அப்போது, வீரபத்திரரின் மீது கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜோதிப் பிழம்பானது, இரண்டறத் தழுவியது. உருவமே மாறியது. யாளி எனும் மிருக முகத்துடன் காட்சி தந்தது. கழுத்து முதல் இடுப்பு வரை மனித உடல் தரித்திருந்தது. சிம்மம் போன்ற கால்களும் வாலும் இருந்தன. கடும் உஷ்ணத்துடன் இருந்த அந்த வினோத உருவம்… சரபேஸ்வரர் என அழைக்கப்பட்டது. நரசிம்மரை சரபேஸ்வரர் அடக்கினார். உக்கிரம் தணித்தார். ஆவேசத்தில் இருந்து அமைதிக்கு மாறினார். ஆக்ரோஷத்தில் இருந்து சாந்தரூபமாகத் தோன்றினார். அன்று முதல் சரபேஸ்வர வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகச் அமைந்தது என்கிறது புராணம்.

நரசிம்மர் வழிபாடு எத்தனை வலிமைமிக்கதோ அதேபோல் சரபேஸ்வர வழிபாடும் வலிமையானது. எதிர்ப்புகளையெல்லாம் அழித்து அருளக்கூடியது. இன்னல்களையெல்லாம் போக்கித் தந்தருளக்கூடியது. பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் முடிவைத் தந்து கைதூக்கிவிடுவார் சரபேஸ்வரர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தமிழகத்தில் சரபேஸ்வரருக்கு கோயிலும் குறைவு. கோயிலில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் அரிது. கும்பகோணம் அருகே திருப்புவனம் தலத்தில் சரபேஸ்வர் பிரமாண்ட ரூபத்தில் காட்சி தருகிறார். சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரருக்கு சந்நிதி அமைந்திருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி சந்நிதி கொண்டிருக்கிறார். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருப்புவனம் கோயில், கோயம்பேடு லவனும் குசனும் வழிபட்ட ஆலயம் என சரபேஸ்வரருக்கு சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

நரசிம்மரையும் சரபேஸ்வரரையும் வணங்கிப் பிரார்த்திப்போம்! எதிர்ப்புகளும் தவிடுபொடியாகும்; எதிரிகளும் பலம் இழப்பார்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *