பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “பழனியில் முருகன் கோயிக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றதும், கொடைக்கானலில் இருந்து வந்த அதிகாரி அன்றே பணியில் இணைந்து இந்தப் பதிவை மேற்கொண்டதும், ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பத்திரப்பதிவை ரத்து செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது நல்ல நடவடிக்கை என்றாலும், அமைச்சர், “இது அறியாமல் நடந்த தவறு’ என்று கூறுவது பொதுமக்களிடையே சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருப்பதும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படாததும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இம்முறைகேட்டில் முழுமையான விசாரணை நடத்தி, நிலத்தை மீட்க நீதிமன்றத்தை நாடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.