International
oi-Halley Karthik
மனாமா: நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில், பஹ்ரைனில் உள்ள தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்திருக்கிறது. அதேபோல இந்த தாக்குதல் நடந்த நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்தி இருந்ததால்.. பல்வேறு பாதிப்புகளை ஈரான் கடந்த காலங்களில் எதிர்கொண்டு இருந்தது. இப்போது அமெரிக்காவில் இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்து இருப்பதால், ஈரான் எதிர் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறது.

ஈரானின் இந்த தாக்குதலால் தொழிற்சாலை வளாகம் சேதமடைந்து தீப்பிடித்ததாகவும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பக்ரைனின் அல் ரிஃபா மற்றும் அவாலி ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதில், அமெரிக்காவின் இரண்டு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈரானின் புரட்சிகர காவல் படை கூறி இருக்கிறது.
அதே நேரத்தில், உலகின் 5ல் 1 பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய வழித்தடம்மான ஹார்முஸ் ஜலசந்தியில், டேங்கர் கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒரு கப்பல் அடையாளம் தெரியாத ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், மற்றொரு கப்பலின் எஞ்சின் அறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிரிட்டிஷ் கடல்சார் ஆர்கனைசேஷன் தெரிவித்திருக்கிறது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எச்சரிக்கைகளை மீறி தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் நுழைந்த மற்றொரு கப்பல், கடல் கன்னி வெடியில் மோதி தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த கப்பல் பயணித்த பாதையில் இருந்த அனைத்து கன்னி வெடிகளையும் நாங்கள் எடுத்துவிட்டோம் என அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.
ஒரு பக்கம் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்ப் பின்னடைவு சந்தித்து, ஈரான் விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். இன்னொரு பக்கம் இஸ்ரேலில் நெதன்யாகுவும் தேர்தல் தோல்வியை சந்தித்துள்ளார். விரைவில் அவர் பிரதமர் பதவியை இழக்க போகிறார். இப்படியாக அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில்.. அமெரிக்க படைகளை ஈரான் குறி வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஒரே சமயத்தில் பக்ரைன் மீதும், ஜலசந்தியிலும் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது.. ஈரானின் கை ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. போர் விஷயங்களை பொறுத்தவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் இந்த தொடக்கத்துக்கு காரணமாகும். அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகளான பக்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் ராணுவ தளங்கள் இருக்கின்றன. இந்த நாடுகள் நேரடியாக போரில் பங்கேற்கவில்லை என்றாலும் கூட.. அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்திருப்பதால் தாக்குதல்களை சந்தித்து வருகின்றன.