India
oi-Vigneshkumar
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அங்கு ஆதிக்கம் செலுத்தும் வகையில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அங்கு சட்டசபை தேர்தலுக்கு 2 ஆண்டுகள் இருந்தாலும் கூட இந்த தோல்வி பாஜகவையே ஆட்டம் காண வைத்துள்ளது.
ராஜஸ்தானில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு சட்டசபை தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இந்த தோல்வி பாஜகவுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதி முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் என இரண்டிலும் காங்கிரஸ் தெளிவான முன்னிலை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்
ராஜஸ்தானில் உள்ள 37 மாவட்ட ஊராட்சிகளில் 25 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் மொத்தம் உள்ள 419 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுயேச்சைகள் 56 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி, பாரத் ஆதிவாசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளன.
பாஜகவின் கோட்டை காலி
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மேவார், மார்வார் உள்ளிட்ட பகுதிகளிலும் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வென்றுள்ளது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், பில்வாரா ஆகிய இடங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றுகிறது. அதேநேரம் அஜ்மீரில் மட்டும் பாஜக தனது ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளது. உதய்ப்பூரில் வென்றாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளது.
சித்தோர்கர், சிரோஹி, ராஜ்சமந்த், ஜலோர் போன்ற பாஜக வலுவாக உள்ள பகுதிகளிலும் காங்கிரஸ் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் பஜன் லால் சர்மாவின் சொந்த தொகுதியான சாங்கனேர் ஊராட்சி ஒன்றியத்தை ஆர்எல்பி கைப்பற்றியுள்ளது. அவரது சொந்த மாவட்டமான பரத்பூரில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதாவது முதல்வரின் தொகுதியில் கூட பாஜகவுக்கு தோல்வி தான். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வென்ற ஜோத்பூரிலும், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வென்ற பிகானேரிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
அதிர்ச்சி தோல்வி
ராஜஸ்தான் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் ஜபர் சிங் கர்ராவின் குடும்பத்தினருக்கும் தேர்தலில் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி சாந்தி தேவி, ஸ்ரீமாதோபூர் ஊராட்சி ஒன்றியத்தின் 17-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அவரது இரண்டு மகன்களும் 19 மற்றும் 20-வது வார்டுகளில் படுதோல்வி அடைந்தனர்.
பாஜக vs காங்கிரஸ்
2023 சட்டடபை தேர்தலில் 200 இடங்களில் 115 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த பாஜகவுக்கு, இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பின்னடைவாக பார்க்கப்படுகின்றன. அப்போது தான் பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவுக்கு பதிலாக பஜன் லால் சர்மாவுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதுவும் கூட பாஜகவின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸை விட பாஜக முன்னிலை பெற்றிருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 0.91 சதவீதமாகவே இருந்தது. ஆனால், இப்போது கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் அதை விட பிரம்மாண்ட வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது.

