பாட்டிலுக்கு 10 ரூபா …….. அதிரடி ஆக்‌ஷன் காட்டிய உயர்நீதிமன்றம் ! – Kumudam

Spread the love

சென்னையில் பெரம்பூர், கொளத்தூர்,மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள்  மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுபோல, 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தபபட்ட  பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். 

இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று கூட மது வாங்கிய போது ரசீது வழங்கப்படவில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது எனவும், கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நுகர்வோர் கூடுதல் தொகையை கொடுக்க கூடாது எனவும் அவர்கள் கொடுப்பதால் தான் கடை பணியாளர்கள் கேட்கின்றனர் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, அரசு சுற்றறிக்கையை பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என நுகர்வோருக்கு உத்தரவிட்டார்.அந்த புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை பணியமர்த்த, உள்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,  மனுதாரர் அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *