இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை மரணமடைந்த கிருஷ்ணராஜிடம் பழகிய நினைவுகளை இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக நான் பணிபுரிந்த படங்கள்ல தேவாவும் ஒண்ணு. விஜய், ஸ்வாதி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிச்ச அந்தப் படத்துக்கு இசை தேவா.
அந்தப் படத்துல “மருமகனே மருமகனே’ன்னு ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டை தேவாவுடன் கிருஷ்ணராஜும் சேர்ந்து பாடியிருப்பார்.
படத்தின் உதவி இயக்குநரா இருந்ததால் நான் மியூசிக்குக்காக தேவாவை அடிக்கடி ஸ்டூடியோவுல சந்திப்பேன். அப்படியொரு நாள் நான் அவரைச் சந்திக்கப் போனப்ப, ஸ்டூடியோவுக்குள் ஒருத்தர் பாடிட்டிருந்தார். தேவா அப்ப வெளியாகத் தயாரா இருந்த ‘பாட்ஷா’ பட மியூசிக்ல பிஸியா இருந்தார்.
பொதுவா இன்னொரு பட வேலை நடந்திட்டிருக்கிற இடத்துல வேறொரு பட யூனிட்டைச் சேர்ந்தவங்களை யாரும் அனுமதிக்க மாட்டாங்க.
ஆனா தேவா மனுஷனை மனுஷனா மதிக்கிற தனது குணத்தாலும், உதவி இயக்குநர்கள் கிட்ட ரொம்பவே பாசமா நடந்துக்கிடறவர்ங்கிறதாலயும், தேடிப் போன என்னை உள்ளே அனுமதிச்சார்.
அங்க நான் போன நேரம் ”பாட்ஷா’ படத்தின் ‘நான் ஆட்டோக்காரன்’ பாடலை கிருஷ்ணராஜ் பாடிட்டிருந்தார். ஒரு ஓரமா நின்னு அவர் பாடினதை நானும் கேட்டேன். பாடி முடிச்சதும், எங்கிட்டயும் ‘எப்படி இருக்கு’ எனக் கேட்டார் தேவா. உள்ளபடியே அந்தப் பாட்டு கிருஷ்ணராஜ் குரல்ல அவ்வளவு நல்லா இருந்தது. அதைச் சொல்லிட்டு பிறகு நான் போனது தொடர்பா பேசிட்டு வந்துட்டேன்.