கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிடுகின்றனர்.
இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுகளிலும் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் விக்னேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்த தொகுதியில் 2001 ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அ.தி.மு.க-வின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது. மேலும், தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன் இரண்டாவது இடம் பெற்ற நிலையில், இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், த.வெ.க-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
இது குறித்து விக்னேஷ் கூறியதாவது, “எனக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம் தளபதி விஜய்க்கு விழுந்த ஓட்டுகள் தான். மக்கள் அவரை நம்புகிறார்கள். வாக்கு எண்ணிக்கை நிறைவில் பெரும்பான்மைக்கு தேவையான 117-ஐ தாண்டி, த.வெ.க 130 இடங்களில் வெற்றி பெறும். த.வெ.க. தனித்து ஆட்சி அமைக்கும். எனக்கு அரசியல், பணப் பின்புலம் இல்லை. என்னை விட எத்தனையோ கோடி பணம் உள்ளவர்கள் கூட சீட் கேட்டார்கள். இருந்தாலும் என்னை நம்பி விஜய் வாய்ப்பு தந்தார். பாமரனில் இருந்து ஒருவன் வர வேண்டும் என நினைத்தார். கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பது தான் அவரது சிந்தனை. ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருப்பேன்” என்றார்.