“சூப்பர்ஸ்டாரைப் பார்த்துப் பேசணும்!”
சண்முகவேலுக்கு ரஜினிகாந்த் மீது தனி ஈர்ப்பு. ரஜினியின் குரல், பஞ்ச் வசனங்கள், நடிப்பு, பாடல்கள் என அனைத்தையும் ரசிக்கும் தீவிர ரசிகர்.
அவருடைய மிகப்பெரிய ஆசைகளில் ஒன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்பதுதான்.
இசையிலும் அவருக்கு பரந்த ரசனை இருக்கிறது. எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் எனப் பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையையும் ரசிக்கிறார்.
சண்முகவேலிடம், “உங்கள் வாழ்க்கையே ஒரு ரேடியோ நிகழ்ச்சியாக இருந்தால், அதற்கு என்ன தலைப்பு வைப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
சிறிது யோசித்த அவர் சொன்ன பதில்,
“கண் தெரியாதவர்களின் வாழ்க்கை வரலாறு.”
அவரிடம் இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது, “உங்களுக்கு கனவு வருமா?”
“கனவு எல்லாருக்கும் வருவதுதான். நாம ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து யோசிச்சுக்கிட்டிருந்தா, சில நாட்களுக்குப் பிறகு அது கனவுலயும் வரலாம்” என்று கூறினார்.
பார்வையுள்ளவர்களுக்கு கனவில் உருவங்கள் தெரியும். பார்வையற்றவர்களுக்கு?
அவருடைய பதில், “குரல்.”
அவர் கேட்கும் மனிதர்களின் குரல்களே அவரது கனவுகளாக மாறுகின்றன.
பார்வை இல்லாத கண்கள்… எல்லையில்லாத கனவுகள்!
தனக்கென ஒரு வீடு வேண்டும். ரேடியோவில் தொடர்ந்து பேச வேண்டும். தன்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். ஒருநாள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேச வேண்டும்.
இப்படி சண்முகவேலின் ஆசைகளுக்கு முடிவே இல்லை.
வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து, ஆட்டோ பிடித்து ரேடியோ நிலையம் செல்லும் ஒவ்வொரு நாளும் அவர் தன்னுடைய வாழ்க்கையிடம் சொல்லும் செய்தி ஒன்றுதான்
“என்னால முடியாது என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை… நானே என்னை நம்பினால், என் குரலுக்கு ஒரு உலகம் இருக்கிறது!”
கண்களால் உலகத்தைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால், கனவு காண கண்கள் தேவையில்லை. அந்தக் கனவை நம்பி அதை நோக்கி நடக்க ஒரு தன்னம்பிக்கை மனம் போதும்.
அந்த மனதோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் சண்முகவேல்.