தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது 26), இவரும் அதே ஊரில் வடக்குத் தெரு லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்த் (20) இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். தற்போது இருவரும் சேர்ந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் புதிய செல்போன் வாங்குவதற்காக பாவூர்சத்திரம் வந்துள்ளனர். அதன் பின் கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் பைக்கில் கீழப்பாவூர் – அருணாப்பேரி சாலையில் சென்றபோது இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி முகிலன் (எ) வசந்த், பிரவீனை கீழே தள்ளி தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பிரவீனுக்குத் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. மயக்கமடைந்த பிரவீனை அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்து எடுத்துள்ளார். அதிலும் கண் விழிக்காததால் பதறிய வசந்த், பைக் விபத்து ஏற்பட்டு விட்டதாக ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார். ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், வசந்த்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவுசெய்து முகிலன் என்ற வசந்திடம் விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முகிலன் என்ற வசந்த் சக நண்பர் பிரவீனைக் கீழே தள்ளி தலையில் தாக்கி காயம் ஏற்படுத்தியதில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீஸார் விபத்தை கொலை வழக்காக மாற்றி முகிலன் (எ) வசந்தைக் கைதுசெய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இறந்த பிரவீனுக்கு சரவண பிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது.
குடிபோதையில் சக நண்பரை இளைஞர் கொலைசெய்த சம்பவம், பாவூர்சத்திரம் மற்றும் கல்லூத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.