விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘அப்பாகுட்டி’ திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குநர் மு. மாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேற்றைய தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ படம் தொடர்பாக விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார்.

அவர், “‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் குறித்த அறிவிப்பை இந்த நிகழ்வில் வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் படப்பிடிப்பிற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று நம்புகிறோம். இதனைத் தொடர்ந்து, ‘அயோத்தி’ பட இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் படமும் தயாராகி வருகிறது.
இப்படத்தின் பணிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தத் திரைப்படம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்” என்றவர், “‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தின் ஆடியோ உரிமையை விற்பனை செய்ய முயன்றபோது, பல நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை.
அவர்களிடம் ‘நூறு சாமிகள் இருந்தாலும்…’ பாடலைப் போட்டுக் காட்டியபோது, ‘இந்தக் காலத்தில் அம்மா பாடல்கள் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது சார்’ என்று கூறி நிராகரித்துவிட்டனர்.
வழக்கமான விலையை விட வெறும் 10 சதவீதத் தொகையை மட்டுமே அவர்கள் ஆஃபர் செய்ததால், அந்தப் படத்தின் ஆடியோ உரிமையை யாருக்கும் கொடுக்காமல் நானே வைத்துக்கொண்டேன்.
ஆனால், படம் வெளியான பிறகு அந்தப் பாடல் அடைந்த பிரம்மாண்ட வெற்றி அனைவருக்கும் தெரியும். அதேபோன்ற ஒரு சூழல்தான் தற்போதும் நடந்துள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள உணர்வுப்பூர்வமான அப்பா பாடலைக் கேட்டுவிட்டு சிலர், ‘இப்போதெல்லாம் இந்த மாதிரியான பாடல்களை யாரும் கேட்பதில்லை’ என்று கூறினார்கள். எனக்கு ‘பிச்சைக்காரன் 1’ படம்தான் நினைவுக்கு வந்தது.
அன்றைக்கு அம்மா பாடலுக்கு என்ன நடந்ததோ, அதேபோல்தான் இந்த ஆல்பமும், திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்துள்ளது. இது மிகச் சிறந்த எமோஷனல் பாடல்கள் அடங்கிய ஒரு திரைப்படமாக இருக்கும்” எனப் பகிர்ந்திருக்கிறார்.