கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி மற்றும் எக்ஸாலஜிக் நிறுவனத்துக்கு இடையேயான பண பரிவர்த்தனை சம்பந்தமாக கடந்த 27-ம் தேதி அமலாக்கத்துறை கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு நடத்தியது. அது பெரிய அளவில் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளின் கார் நொறுக்கப்பட்டது. அது சம்பந்தமாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.எம் நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வரும், கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவருமான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் வி.டி.சதீசன் சில நாட்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வி.டி.சதீசனிடம் அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய வி.டி.சதீசன் கூறுகையில், “அமலாக்கத்துறை ரெய்டு விவகாரத்தில் எப்போது பதில் சொல்லவேண்டும் என முடிவுசெய்ய எனக்கு கால அவகாசம் வேண்டும். செய்தியாளர்கள் 12 முறை கேள்வி கேட்டதாக சொல்கிறார்கள். கேள்விக்காக ஒருமுறை மைக் நீட்டியபோது அது எனது முகத்தில் இடித்தது. அதுபற்றி நான் யாரிடமும் கூறவில்லை. எப்போது பதில் சொல்ல வேண்டும் என்பதற்கான உரிமையை எனக்கு தரவேண்டும். கேள்விகேட்க உங்களுக்கு உரிமை இருப்பதுபோன்று, பதிலளிக்க எனக்கு அவகாசம் தேவை. அதுபற்றி முழுமையாக தெரிந்து கொண்டுதான் நான் பேச முடியும். எனவே பதில் எப்போது சொல்ல வேண்டும் என நன் முடிவு செய்வேன்.

அது மத்திய அரசின் ஏஜென்சி பதிவு செய்த வழக்கு. விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். மாநில அரசுக்கு இதில் எந்த ரோலும் இல்லை. ரெய்டு பற்றி எங்களுக்கு அவர்கள் தெரிவிக்கக்கூட இல்லை. போலீசுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனாலும், கூட்டமாக இருந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி போலீஸை அங்கு அனுப்பினார் உள்துறை அமைச்சர். விசாரணையின் ஒரு பகுதியாக வந்த பெண்கள் உள்ளிட்ட அதிகாரிகளை ஒரு குழு தாக்குதல் நடத்தி காரை உடைக்கிறார்கள். காருக்குள் இருந்தவர்களை தாக்குகிறார்கள். அது சட்டத்துக்கு எதிரானது. எக்காரணத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு போலீஸ் போகாமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்துப்பாருங்கள்.