கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த தனியார் கனிம நிறுவனமான சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
இதில், வீணா மூலமாக முதலமைச்சர் பினராயி விஜயன் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.3.28 கோடி லஞ்சமாகப் பெற்றார் என்றும், இந்த லஞ்சப் பணத்தை பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், வீணா மற்றும் தங்களது நண்பர்கள் மூலமாக துபாய்க்குச் சட்டவிரோதமாகக் கடத்தினார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், லஞ்சப் பணத்தைப் பெறுவதற்கும் வெளிநாட்டிற்குக் கடத்துவதற்கும் தனது தந்தை பினராயி விஜயன் மற்றும் கணவர் முகமது ரியாஸுக்கு வீணா உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய மத்திய அமலாக்கத்துறை, இதில் பல்வேறு கிரிமினல் குற்றங்கள் வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8-ம் தேதி கேரள மாநில காவல்துறை டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியது.
அக்கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்கு எக்சாலாஜிக் நிறுவனத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட விவரங்கள், சி.எம்.ஆர்.எல் நிறுவன மேலாண் இயக்குநர் லஞ்சப் பணம் வழங்கியது மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பி.சுரேஷ்குமார் இதற்கு உதவி புரிந்தது ஆகியவை குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன், லஞ்சப் பணத்தைக் கையாள்வதற்கும் மாற்றுவதற்கும் வீணா மற்றும் முகமது ரியாஸுக்கு ஷைஜல், பி. நிகில், ஹசன் வாரிஷ், ஃபைசாஜ் வி.பி, நந்துலால் எம் ஆகியோர் உதவி புரிந்த விவரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. மேலும், இதுதொடர்பான கூடுதல் ஆதாரங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் கேரள அரசுக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் சமர்ப்பித்தது அமலாக்கத்துறை.

அமலாக்கத்துறையின் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் சட்ட ஆலோசனை கோரினார். அப்போது, வழக்குப் பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை மட்டும் நடத்தலாம் என அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்தார்.
எனினும், வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதற்கான முகாந்திரங்கள் அமலாக்கத்துறை கடிதத்திலேயே தெளிவாக உள்ளன எனத் தலைமை அரசு வழக்கறிஞர் சட்ட ஆலோசனை வழங்கினார். இதையடுத்து உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.