உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி கடைசி நிமிட கோலால் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மாற்று வீரராகக் களமிறங்கிய கேப்ரியல் மார்டினெல்லி, இன்ஜுரி டைமில் கோல் அடித்து ஜப்பானின் கனவைத் தகர்த்தார்.
ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்!
ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த நாக்-அவுட் போட்டியில், 68,777 ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் மைதானத்தை நிறைத்திருந்தனர். ஆரம்பம் முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. ஆனால், ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் டானிலோ கொடுத்த தவறான பாஸைப் பயன்படுத்திய ஜப்பான் மிட்பீல்டர் கைஷு சானோ, பிரேசிலின் சீனியர் வீரர் கேஸ்மிரோவை எளிதாகக் கடந்து முன்னேறினார். கோல்கீப்பர் அலிசனை ஏமாற்றி அவர் அடித்த கோல், ஒட்டுமொத்த பிரேசில் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது சர்வதேச போட்டிகளில் சானோ அடித்த முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டெழுந்த பிரேசில்… சமன் செய்த கேஸ்மிரோ!
முதல் பாதியில் ஜப்பானின் தடுப்பாட்டத்தில் பிரேசில் திணறியது. நட்சத்திர வீரர் நெய்மர் பென்ச்சில் அமர்ந்திருக்கும் காட்சிகள் பெரிய திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முதல் பாதியின் முடிவில், காயமடைந்த லூகாஸ் பாக்கெட்டா கண்ணீருடன் வெளியேற, அவருக்குப் பதிலாக இளம் வீரர் என்ட்ரிக் களமிறக்கப்பட்டார். இரண்டாம் பாதியில் கார்லோ அன்செலாட்டியின் பிரேசில் அணி ஆக்ரோஷத்தைக் கூட்டியது. அதன் பலனாக, 56-வது நிமிடத்தில் சக வீரர் கேப்ரியல் கொடுத்த அற்புதமான கிராஸை, அனுபவ வீரர் கேஸ்மிரோ தலையால் முட்டி கோலாக மாற்றி ஆட்டத்தைச் சமன் செய்தார்.

த்ரில்லர் க்ளைமாக்ஸ்… மார்டினெல்லி மேஜிக்!
ஆட்டம் சமன் ஆன பிறகு, பிரேசில் வெற்றிக்குத் தீவிரம் காட்டியது. குறிப்பாக, வினிசியஸ் ஜூனியர் ஜப்பான் தடுப்பரணைப் பலமுறை சோதித்தார். அவர் அடித்த ஒரு ஷாட் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஜுரி டைம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில், அர்செனல் வீரரான கேப்ரியல் மார்டினெல்லி அடித்த கோல், ஜப்பான் வீரர்களின் இதயத்தை நொறுக்கியது. இந்த கோல் மூலம் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி, இந்த வெற்றியின் மூலம் நியூஜெர்சியில் நடைபெற உள்ள அடுத்த சுற்றுப் போட்டியில் ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை எதிர்கொள்ளும். மறுபுறம், உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணி என்ற சோகமான வரலாற்றை ஜப்பான் தொடர்கிறது.!