பிழைப்புக்காக துணி விற்றவர்… இன்று உலகக் கோப்பை ஹீரோ! | Orlando Gill Paraguay goalkeeper world cup hero

Spread the love

கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர்… ஒரே இரவில் சரித்திரம் படைத்திருக்கிறது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது பராகுவே.

இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில். 120 நிமிடங்கள் களத்தில் அரணாக நின்று, பின்னர் ஷூட் அவுட்டில் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து, தன் தேசத்தின் ஹீரோவாக அவதரித்திருக்கிறார்.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், 6 அடி 6 அங்குல ராட்சசனான ஆர்லாண்டோ கில்லின் தடுப்புகளைத் தாண்டி அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

போட்டி முழுவதும் ஐந்து முக்கிய சேவ்களைச் செய்த கில், ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட் வரை கொண்டு சென்றார். ஷூட் அவுட் என்றாலே ஜெர்மனிதான் கிங் என்பார்கள். ஆனால், அந்த சரித்திரத்தை மாற்றிக் காட்டினார் கில்.

ஜெர்மனியின் முதல் கிக்கை எடுத்த காய் ஹாவர்ட்ஸ் மற்றும் நிக் வோல்ட்மேட் ஆகியோரின் ஷாட்களைத் தடுத்து, ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதியாக, ஜொனாதன் தா தன் ஷாட்டை வெளியே அடிக்க, உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஜெர்மனியை ஒரு பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய அணி என்ற பெருமையுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது பராகுவே.

இந்த வெற்றிக்கு பின்னால், வலிகளும் போராட்டங்களும் நிறைந்த ஒரு கதை இருக்கிறது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்லாண்டோ கில் தனது குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்க, தன் சொந்த உடைகளையே விற்றுப் பிழைப்பு நடத்தியிருக்கிறார். அந்தக் கடினமான காலகட்டத்தில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு உருக்கமான பதிவு, அப்போது யாராலும் கவனிக்கப்படவில்லை.

ஆனால், ஜெர்மனிக்கு எதிரான இந்த வெற்றிக்குப் பிறகு, அந்தப் பழைய பதிவு மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. பராகுவேயின் சான் லோரென்சோவில் பிறந்த கில், தனது சிறு வயதில் ஒரு ஃபார்வர்டு அல்லது மிட்பீல்டராகத்தான் விளையாடத் தொடங்கினார். பின்னர் கோல்கீப்பராக நிலைபெற்றார். ஜாம்பவான்களான சோச லூயிஸ் சிலாவர்ட், ஜஸ்டோ வில்லர் போன்றோர் அலங்கரித்த பராகுவே கோல்கீப்பிங் பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக இன்று அவர் உருவெடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *