பீரியட்ஸ் வலியால் பள்ளி செல்ல மறுக்கும் மகள்… இப்போதே சிகிச்சைகள் அவசியமா? | Daughter refusing to go to school due to period pain… Is treatment necessary at this early age?

Spread the love

கர்ப்பப்பை, சினைக்குழாய் என எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கும், ஆனாலும் பீரியட்ஸ் நாள்களில் வலி இருக்கும். இதை ‘பிரைமரி டிஸ்மெனோரியா’ (Primary dysmenorrhea) என்கிறோம். வேறு சிலருக்குக் கடுமையான வலி இருக்கும். அதற்காக நிறைய மாத்திரைகள் உபயோகிப்பார்கள். இப்படி அளவுக்கதிமாக மாத்திரைகள் எடுக்கும் அளவுக்கு வலியை உணர்பவர்கள், அதை அலட்சியம் செய்யக்கூடாது. மகப்பேறு மருத்துவரை அணுகி, வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

கர்ப்பப்பையின் லைனிங்கானது, கர்ப்பப்பையையும் தாண்டி சினைப்பை, சினைக்குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் என உடலின் எந்தப் பகுதியிலும் படிவதை ‘எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis) என்கிறோம். 20 முதல் 40 வயதுப் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது. ‘அடலசன்ட் எண்டோமெட்ரியோசிஸ்’ (adolescent endometriosis) என்ற பாதிப்பு இளம் வயதினரிடம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். 

அதாவது 10 பேரில் ஒருவர் என்ற அளவில் ‘அடலசன்ட் எண்டோமெட்ரியோசிஸ்’ பிரச்னை பெண் குழந்தைகளைப் பாதிப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. எண்டோமெட்ரியோசிஸ் பாதித்த பெண்களால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல முடியாத அளவுக்கும், வீட்டு வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.

பீரியட்ஸ் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே கடுமையான வலி ஆரம்பிக்கும்.

பீரியட்ஸ் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே கடுமையான வலி ஆரம்பிக்கும்.
freepik

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு பீரியட்ஸின்போது தாங்க முடியாத வலி இருக்கலாம். அதே போல ப்ளீடிங்கின் அளவும் அதிகமாக இருக்கலாம். பீரியட்ஸ் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பே கடுமையான வலி ஆரம்பிக்கும். அதாவது, மாதவிடாயின் இரண்டாம், மூன்றாம் நாள் அனுபவிக்கிற வலியைவிட பல மடங்கு அதிகமான வலியை, பீரியட்ஸ் தொடங்கும் முன்பே அனுபவிப்பார்கள்.

இப்படி உங்கள் பெண் குழந்தை பீரியட்ஸ் வலியால் துடித்தாலோ, ப்ளீடிங் அதிகமாகப் போவதாகச் சொன்னாலோ, அம்மாக்கள் சொல்லும், ‘எங்களுக்கெல்லாம்கூட அப்படித்தான் இருந்தது. போகப் போகச் சரியாயிடும்’ என்ற சமாதானத்தைச் சொல்லாமல், பீரியட்ஸில் இதெல்லாம் சகஜம் என அலட்சியப்படுத்தாமல் மகளிர் மருத்துவரிடம் அழைத்துச் சொல்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், அது தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இது தவிர சினைப்பை கட்டி, இடுப்பெலும்பு பகுதி இன்ஃபெக்ஷன் போன்றவற்றாலும் பீரியட்ஸின்போது வலி இருக்கலாம். இதுபோன்ற வலி ‘செகண்டரி டிஸ்மெனோரியா’ (secondary amenorrhea) எனப்படும்.

பீரியட்ஸ் வலிக்கு ஒன்றோ, இரண்டோ மாத்திரைகள் போட்டு வலி குறைந்துவிட்டால் அது நார்மல். அதன் பிறகும் வலி தொடர்ந்தால் மாத்திரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. எந்தவகையான வலி நிவாரண மாத்திரைகளையும் அளவு கடந்து உபயோகிப்பது சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். எனவே, இந்த வயதில் இப்படித்தான் இருக்கும் என நீங்களாக முன் முடிவுக்கு வராமல், உங்கள் மகளை உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

டாக்டர் மாலா ராஜ்:

சென்னை, அண்ணாநகரில் உள்ள Firm Hospitals-ன் நிறுவனர்.மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியலில் 25 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லேப்ராஸ்கோப்பி சிகிச்சையில் நிபுணர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *