புதுச்சேரி ஊசுடு ஏரியில் ஆய்வு | அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய துணைநிலை ஆளுநர் | The Lieutenant Governor of Puducherry started his first visit from Osudu Lake

1293708.jpg
Spread the love

புதுச்சேரி: ஊசுடு ஏரியில் இருந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முதல் ஆய்வை தொடங்கினார். மேலும் அவர், “அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று முதல் முறையாக ஆய்வு பணிகளைத்தொடங்கினார். புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரியை முதலில் பார்க்க வந்தார். அவரை தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான சாய் சரவணன்குமார் வரவேற்றார். பின்னர் அவர் ஊசுடு ஏரி தொடர்பாக விளக்கம் தந்தார்.

ஆளுநர், ‘ஏன் ஊசுடு ஏரி தூர்வாருவதில்லை’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது ஆளுநரிடம் பதிலளித்த சரவணன்குமார், “3 துறைகளான வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்பாசனப்பிரிவு ஆகியவை இணைந்து ஏரியை பராமரிக்கின்றன. அவ்வப்போது மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுகொண்டு ஏரியை சரியாக பராமரிப்பதில்லை” என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதையடுத்து அதிகாரிகள் ஆளுநரிடம் ஊசுடு ஏரி தொடர்பாக விளக்கம் தந்தனர். தண்ணீர் வரும் வழிகள், இங்கிருந்து தண்ணீர் நகரப்பகுதிக்கு எடுக்கவுள்ள திட்டம் தொடர்பாக குறிப்பிட்டனர்.

அப்போது ஏன் ஊசுடு ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டுவிட்டு, ஆளுநர் ஏரிப்பகுதியை பார்வையிட்டார். பின்னர் ஏரிக்கரையில் நடந்து சென்று பார்த்தார். ஆய்வு தொடர்பாக ஆளுநர் கைலாஷ்நாதனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரியிலுள்ள ஏரிகளை பார்க்க வந்தேன். முதல்முறையாக இங்கு வந்தேன். ஏரி, வாய்க்கால் தூர்வாரப்படாதது தொடர்பான விஷயங்களை ஆராய்ந்து பதில் தருகிறேன்.

நான் வந்து இரண்டுநாள்தான் ஆகிறது. அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறேன். தற்போது ஒவ்வொரு துறையாக பார்த்து வருகிறேன்.” என்று குறிப்பிட்டார். மக்கள் உங்கள் மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று தெரிவித்தற்கு சிரித்தப்படி அடுத்து பாகூர் ஏரிக்கு புறப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *