திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள் இருக்கின்றன. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் இருக்கும் பிடதி என்ற பகுதியில் இருக்கிறது நித்தியானந்தாவின் ஆசிரமம்.
அங்கிருந்த பெண் சீடர்கள் சிலர், நித்தியானந்தா தங்களைப் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக காவல்துறையில் புகாரளித்தனர். அதையடுத்து கடந்த 2010-ல் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை, துரோகம், ஏமாற்றுதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது வழக்குப் பதிவு செய்தது கர்நாடக காவல்துறை.
அதேபோல குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்திச் சென்று பணியில் வைத்திருப்பதாக பெற்றோர்கள் சார்பில் காவல்துறைக்குப் புகார்கள் சென்றன.

அதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு குழந்தைகள் நலப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறை, அந்த ஆசிரமத்தின் நிர்வாகிகளைக் கைது செய்தது.
இந்த வழக்குகளின் பிடியாணைகளுக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், நித்தியானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது இந்திய அரசு. அதற்கு அடுத்த ஆண்டே கைலாசா என்ற தனி நாட்டை ஏற்படுத்தியிருப்பதாக வீடியோ மூலம் அறிவித்த நித்தியானந்தா, அந்த நாட்டின் குடியுரிமைக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.
தனி நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா தன்னுடைய சொந்த நாடான இந்தியாவுக்கு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து வருகின்றன.