– வி.ராம்ஜி
புரட்டாசி மாதத்தை புண்ணியங்கள் நிறைந்த மாதம் என்பார்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய தெய்வங்கள் என்று வணங்கி வருகிறோம். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணு வழிபாடு மிகவும் உகந்தது என்று அந்தக்காலத்தில் இருந்தே அந்த சடங்கு சாங்கியங்களைச் செய்து வருகிறோம்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணாவதாரத்தில் திருமால் அருளினார் என்றாலும் புரட்டாசி மாதத்தில்தான், பெருமாள் வழிபாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 108 திவ்விய தேசங்கள் என்றில்லாமல், எங்கெல்லாம் பெருமாள் கோயில்கொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் சிறப்பு வழிபாடுகளும் பிரம்மோத்ஸவம் முதலான வைபவங்களும் விமரிசையாக நடைபெறும்.
சைவ வைணவ பேதங்கள் போல், உணவிலும் சைவம் அசைவம் என்று பிரித்துப் பார்க்கும் நிலை ஒருகாலத்தில் உருவானது. அதையடுத்து ‘நான் வெஜ்’ சாப்பிடுகிறவர்கள் என்றைக்கு அசைவம் எடுத்துக்கொள்கிறார்களோ அன்றைக்குக் கோயிலுக்குச் செல்லமாட்டார்கள். இப்படி அவர்களாகவே ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்தார்கள்.
அடுத்து… திங்கள் சிவ வழிபாடு, செவ்வாய் முருக வழிபாடு, வெள்ளி மகாலட்சுமி வழிபாடு, வியாழன் குரு வழிபாடு என்பது போல், புதன்கிழமையும் சனிக்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக வைத்திருக்கிறோம். இந்த நாட்களில், சக்கரத்தாழ்வார், மகாவிஷ்ணு, அனுமன், ஸ்ரீராமர், கிருஷ்ணர் என வைணவக் கடவுளரை வணங்குவதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம்.
சிவாலயங்களுக்கு பெருமாளுக்கும் சந்ந்தி அமைந்திருக்கும். இப்படியான ஆலயங்கள் நிறையவே உள்ளன. ஆனால் எந்தவொரு பெருமாள் கோயிலிலும் சிவலிங்கமும் நவக்கிரகமும் இருக்காது. ஆனாலும் சைவ வைணவ பேதமில்லாமல் இருக்கின்ற பக்தர்கள் நிறைந்திருக்கிற உலகில், பெருமாளை வழிபடுவதற்கு உகந்த புரட்டாசி மாதம் முழுக்கவே அசைவம் சேர்க்கமாட்டார்கள் பக்தர்கள்.
அதேபோல், நவக்கிரகங்களில் உள்ள புதன் பகவான், சைவத்துக்கு உரிய கிரகமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே புத்தியைத் தெளிவாக்கி, காரியத்தில் வெற்றியைத் தரும் புதன் பகவானை வணங்கும் வகையில், புரட்டாசியில் அசைவத்தை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள் ஆச்சார்யர்கள்.
புரட்டாசியில் அசைவம் சேர்க்காமல் இருப்பதற்கு, இன்னொரு காரணமும் உண்டு. புரட்டாசியில்தான் மகாளயபட்சம் வரும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மகாளய என்றால் மிகச்சிறந்த, உன்னதமான, போற்றுதலுக்கு உரிய காலம் என்று அர்த்தம். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயபட்ச காலம் என்பது பதினைந்து நாள். நம் முன்னோர்களை, பித்ருக்களை நினைத்து வணங்கவேண்டிய நாள். புரட்டாசியின் முப்பது நாட்களும் பெருமாள் கோயில்களில், பிரம்மோத்ஸவம், தேரோட்டம், தெப்போத்ஸவம், ஊஞ்சல் உத்ஸவம் என களைகட்டும்.
அதுமட்டுமா? புரட்டாசியில்தான் நவராத்திரிப்பெருவிழா வரும். அம்பிகையைக் கொண்டாடுகிற ஒன்பது நாட்களும் கொலு, பஜனை, பூஜை என வீட்டுக்குவீடு அமர்க்களப்படும். மொத்த மாதமும் விசேஷங்கள் நிறைந்த, வழிபாடுகள் கொண்ட மாதம் என்பதால், அசைவம் தவிர்க்கச் சொல்கிறார்கள் முன்னோர்கள்.
மேலும் புரட்டாசியில் புரட்டிப்போடும் மழை, ஐப்பசியில் அடைமழை என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆகவே சீதோஷ்ண நிலையில் ஏற்படுகிற மாற்றத்துக்கு தக்கபடி, சாத்வீக உணவுகளை மேற்கொள்வதற்காக, அசைவம் தவிர்க்கச் சொல்வதாக அறிவியல் சிந்தனையாள்ர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால்தான், நெய் கலந்த உணவு, புரோட்டீன் கலந்த சுண்டல் முதலான நைவேத்தியங்கள் செய்து அனைவருக்கும் வழங்குவது நடைமுறைக்கு வந்திருப்பதாகப் பார்க்கவேண்டியிருக்கிறது.
பூமியைக் குளிரச் செய்யும் மழை என்றாலும் நம் உடலுக்கும் வயிற்றும் ஒருவித சூட்டை உற்பத்தி செய்யும் இந்த மழையும் குளிரும்..! அதனால்தான் சூட்டைக் கிளப்பும் அசைவம் வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். மேலும் பூமியின் இயக்கத்துக்கு தகுந்தபடி நமக்கு செரிமானக் குறைவும், வயிறு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்படும். கெட்டக் கொழுப்பு உடலில் தங்கிவிடும் காலமும் இதுதான். இதற்காகத்தான், அசைவ உணவைத் தவிர்த்து, உடம்புக்கும் வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து, மழை காலம் தொடங்கும் மாதம் ஆகும். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகி இருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இதனால் புரட்டாசி மாதத்தை ‘சூட்டை கிளப்பிவிடும் காலம்’ என்றும் சொல்வார்கள்!
புரட்டாசிக்குள் நமக்குள்ளேயும் குறிப்பாக நம் வயிற்றுக்குள்ளேயும் இத்தனை மாற்றங்களா எனும் கேள்வி வியக்கவைப்பதுதான்!
புரட்டாசியில் விரதம் மேற்கொள்வோம். மனதுக்கு கடவுள் வழிபாடு, உடலுக்கு சத்தான உணவு என வாழ்வோம்!

