பூம்புகார்: வெயில் மழையில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்: எப்போதுதான் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தம்? | poompuhar-tourist-destination-lacks-bus-shelter

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதாகவும் காப்பியங்கள் போற்றும் முதன்மையான சுற்றுலாத் தளமாகவும் பூம்புகார் விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் பூம்புகார் கடற்கரையையும் ‘சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வரலாற்றினைப் பறைசாற்றும்’ கலைக்கூடத்தையும் கண்டு மகிழ்வதுண்டு.

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பூம்புகாரைப் புனரமைக்க ரூ.23.60 கோடி ஒதுக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகளும் நடைபெற்ற நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பேருந்து நிழற்குடையோ, பேருந்து நிலையமோ இல்லாததால், கால்கடுக்க நின்றும் கிடைக்கும் இடங்களில் அமர்ந்தும் பேருந்திற்கு காத்திருக்கும் அவலநிலையானது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது குறித்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பேசியபோது, “நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து கடற்கரையில் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழித்து மகிழ வந்துள்ளோம். கடற்கரையில் ஓடி ஆடி விளையாடி, உடல் சலித்த நிலையில்தான் வீட்டிற்குச் செல்ல பஸ் பிடிக்க வருகிறோம்.

கடற்கரையில் இருந்து சோர்வான நிலையில் வரும் எங்களுக்கு மேலும் சோர்வை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளது, பஸ் ஸ்டாப் இல்லாதது. இதனால் கிடைக்கும் இடங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு வாசல்களிலும் காவலாளி போல் உட்கார இடம் கிடைத்தால் போதும் என அமருகிறோம்.

எதற்கும் வழி இல்லாத நிலையில் பேருந்து வரும் வரை, உச்சி வெயிலில் கால் கடுக்க நின்று கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது. புகழ்பெற்ற சுற்றுலாத் தளம், மக்களும் அவ்வப்போது கூடும் இடம், இருந்தும் பேருந்திற்கு காத்திருக்கவோ பேருந்தை நிறுத்துவதற்கோ ஒரு சரியான இடம் இல்லை. கடுமையான வெயில், மழைக்காலங்களில்கூட இதே நிலைதான்.

காலையில் வெயில், மாலையில் மழை பெய்வது எல்லாம் தற்காலத்தில் இயல்பாகிவிட்டது. மழை பெய்தால் ஒதுங்குவதற்குக்கூட இங்கு இடம் கிடையாது. இங்குப் புனரமைப்புப் பணிகள் தொடங்கியதிலிருந்தே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிறுத்தமும் பயன்படுத்த முடியாமல் போனது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *