இங்கு ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால் ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவன் சார்ந்திருக்கும் தொழில்துறையில் பல வெற்றிகளை குவிப்பதற்கும் அந்த மனிதனுடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏன் என்றால் நமக்கு பல உதவிகள் அறிவுரைகளை பலர் நமக்கு வழங்கி இருந்தாலும், நாம் எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அவமானப்படுத்தப்படும் போதும், உதாசீனப்படுத்தப்படும் போதும், நிராகரிக்கப்படும் போதும் அதே துறையில் அந்த மனிதர்களுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை வாழ்க்கையில் பதிவு செய்ய வேண்டும் என்ற வெறி ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படும்.
அது போல தான் தளபதி விஜய் அவர்களுக்கு தான் நடித்த முதல் படம் வெளியான போது இதெல்லாம் ஒரு மூஞ்சி இவனெல்லாம் நடிக்க வந்து விட்டான் என்று பலர் அவரை அவமானபடுத்தியும், மட்டம் தட்டியும் பேசினார்கள். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு இதழில், இவர் ஏன் நடிக்க வந்தார் இவர் முகத்தை கண்ணாடியில் பார்த்து இருக்கிறாரா, கதாநாயகனுக்கு உரிய முகம் இல்லை, இவருக்கு ஏன் இந்த வேலை என்று ரீதியில் ஒரு கட்டுரையை, இந்த அரைவேக்காட்டுத்தனமான, கேலித்தனமான, நையாண்டிகளை புறந்தள்ளிவிட்டு விஜய் அவர்கள் கடுமையாக உழைத்தார்.
அதற்காக அவர் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டார். படங்களில், இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பது உங்கள் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் பாடி அசத்தினார்.

எனக்கு மிகவும் பிடித்த தளபதி படங்களை, அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் படமாக நான் கூறுவது பூவே உனக்காக படம்.
பூவே உனக்காக படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரமன் அவர்கள் இயக்கி 1996 ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றிப்படமாக, முதல் வெள்ளி விழா படமாக விஜய் அவர்களுக்கு அமைந்தது. குறிப்பாக, இந்தப் படத்தின் மூலம் அவர் பெண் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தார். ஏன் இந்த படத்தை நான் குறிப்பிட்டு கூறுகிறேன் என்றால், அதற்கு முன்பு அவர் தனது தந்தையின் டைரக்ஷனில் சில படங்களில் நடித்திருந்தாலும், படங்கள் ஒரு ஆவரேஜ் வெற்றியை பதிவு செய்திருந்தது, அவைகள் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் மசாலா படமாக இருந்தன அது ஆண் ரசிகர்களையே கவர்ந்திருந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக பூவே உனக்காக படம் அமைந்தது, இந்தப் படத்தை எங்கள் புதுச்சேரி பீச் ரோட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த அஜந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம் இன்றும் என் மனதில் பசுமையாக நிறைந்துள்ளத. ஏனென்றால், இப்போது அந்த தியேட்டர் அங்கு இல்லை.
இதுபோல் நீங்கள் உங்கள் ஊரில் எந்த தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தீர்கள் என்ற ஞாபகம் உங்கள் மனதில் இருந்தால் அந்த தியேட்டரின் பெயரை பதிவிடவும்.. மற்றும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது எஸ்ஏ ராஜ்குமார், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் என்று தொடங்கும் பாடல், இன்று வரையில் காலம் கடந்து நிற்கிறது.