`பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள்; தங்கம்.!' – மோடியின் வேண்டுகோளும் காங்கிரஸ் விமர்சனமும்!

Spread the love

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், “தற்போதைய சூழலை ஒரு ‘தேசியக் கடமையாக’ கருதி மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. எனவே, எரிபொருள் பயன்பாட்டை குடிமக்கள் குறைக்க வேண்டும். மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் மக்கள் அதையே பயன்படுத்த வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கார்களைப் பயன்படுத்த வேண்டிய சூழலில், ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து பயணிக்கும் ‘கார் பூலிங்’ முறையைப் பின்பற்ற வேண்டும். மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டிற்கு மக்கள் மாற வேண்டும். கோவிட் காலத்தில் பின்பற்றிய ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work from Home) மற்றும் காணொளி வாயிலாகக் கூட்டங்களை நடத்தும் முறையை மீண்டும் செயல்படுத்தலாம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். மேலும், தேச நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் திருமணம் செய்வது, சுற்றுலா செல்வது போன்றவற்றை ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டும்.

இறக்குமதியைக் குறைக்க சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது ஒரு ‘தேசபக்தி’ செயலாக இருக்கும். குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் ரசாயன உரங்களுக்காகச் செலவிடப்படும் நிதியைச் சேமிக்க, உரப் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்து இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.

வேணுகோபால்
வேணுகோபால்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70-லிருந்து 120 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ91-லிருந்து ரூ95 ஆக வீழ்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு 121.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள தகவலின்படி, `பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விற்பனையால் அரசுக்கு மாதம் ரூ30,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ1,000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்ற சூழலில், அதன் தாக்கத்தை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “அரசின் திட்டமிடல் குறைபாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குச் சாமானிய மக்களைப் பொறுப்பேற்கச் சொல்வது அறமற்ற செயல்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *