
பலன் தரும் பரிகாரம்! – வி.ராம்ஜி
லலிதாம்பிகையை வழிபடுவதற்கு லலிதா சகஸ்ரநாமம் இருந்தாலும், ஒரேயொரு வரி கொண்ட ஸ்லோகம், நம் வாழ்க்கையை நல்ல நல்ல திருப்பங்களை ஏற்படுத்தித் தரும் என்பது உறுதி!
உலகின் எல்லா பெண் தெய்வங்களும் சக்தி என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். சக்தி இல்லையேல் சிவமே இல்லை என விவரிக்கிறது சிவபுராணம். சிவத்துக்கே சக்தியாகத் திகழ்பவள் பராசக்தி. உலகின் எல்லா ஆற்றலுக்கும் காரணகர்த்தா, கிரியா ஊக்கி, பெண் தெய்வங்கள்தான்!
ஒரு வீட்டில், பெண்ணின்றி எதுவும் அசையாது. எந்தவொரு இல்லத்தில் பெண் ஆராதிக்கப்படுகிறாளோ, எந்த வீட்டில் பெண்ணுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறுகிறதோ அந்த வீடு சுபிட்சம் பெறும். அங்கே அம்பாள் மனமுவந்து வாசம் செய்கிறாள் என்கிறது தர்மசாஸ்திரம்.
மாறாக, எந்த வீட்டில் பெண்ணின் அழுகுரல் கேட்கிறதோ, எங்கே பெண்ணுக்கு அன்பும் கரிசனமும் காட்டப்படுவதில்லையோ அங்கே சக்தியானவள், ஒருபோதும் வாசம் செய்யமாட்டாள். அந்த வீட்டில் எந்த சுபிட்சத்தையும் அம்பாள் வழங்கமாட்டாள் என்கிறார் வேதிக் விஜய் சர்மா!
ஸாக்த வழிபாடு என்றால் சக்தி வழிபாடு! சிவ வழிபாடு என்பது போல், விஷ்ணு வழிபாடு என்பது போல், கெளமாரம் எனப்படும் குமார வழிபாடு முருக வழிபாடு என்பது போல், ஸாக்த வழிபாடு என்பதும் உண்டு. அதுதான் தேவி வழிபாடு. மேலும் ஸாக்த வழிபாடு என்பது மிக மிக வலிமையானது. உலகை ஆளும் பராசக்தியை எப்படியெல்லாம் வணங்கவேண்டும் என ‘தேவி மகாத்மியம்’ சொல்வதை உணர்ந்தால்,நம் வீட்டு அம்மாக்களையும் அக்காதங்கைகளையும் மனைவி மகள்களையும் கொண்டாடத்தொடங்கிவிடுவோம். சமதையாக நடத்தத் தொடங்கிவிடுவோம்.
இதில், அம்பிகையை ஆராதிப்பதும், மனமுருகி வேண்டுவதும் மிகுந்த பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த அம்பிகையரில், ஸ்ரீலலிதாம்பிகை தனித்துவம் மிக்கவள்.
பெண்களின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டு ஒருபோதும் அமைதியாக இருக்கமாட்டாள் அம்பிகை. பாராமுகமாக இருந்து கைவிடமாட்டாள் தேவி. அப்பேர்ப்பட்ட கருணையே உருவெனக் கொண்டவள் லலிதாம்பிகை. அதனால்தான் எந்த தேவியருக்கும் இல்லாத வகையில், லலிதா சகஸ்ரநாமம் எனும் பொக்கிஷம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில், லலிதா என்று பெண் குழந்தைகளுக்கு இன்றைக்கும் பெயர் சூட்டி அழைப்பதைப் பார்க்கலாம். அம்பாளின் உருவங்களில், லலிதாம்பிகை என்பவள் பேரழகி என்று சொல்லப்படுகிறது. ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தைக் கொண்ட கண்களைக் கொண்டு இந்த அகிலத்தை ஆட்சி செய்கிறாள் என்கிறது ஸ்லோகம் இருக்கிறது.
லலிதாம்பிகைக்கு, ஆலயங்கள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. சிவாலயங்களில் உள்ள அம்பிகைக்கு எத்தனையோ திருநாமங்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. என்னென்ன பெயர்களைக்கொண்டோ, ஒவ்வொரு பெயருக்கும் உரிய காரண காரியங்களுடன் அம்பாளை அழைத்து ஆராதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லலிதாம்பிகை எனும் திருநாமத்துடன் அம்பிகை கோயில்கொண்டிருப்பது, திருமீயச்சூர் திருத்தலத்தில்தான்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், பேரளத்துக்கு அருகிலுள்ளது திருமீயச்சூர். அழகிய இந்த ஆலயத்தில்தான், லலிதாம்பிகை கோயில் கொண்டிருக்கிறாள். இந்தத் தலத்தில்தான், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் நமக்கு அருளக் கிடைத்திருக்கிறது என்று வியக்க வியக்க விவரிக்கிறது ஸ்தல புராணம்!
லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வழிபட்டு, எந்தப் பாசாங்குகளும் இல்லாமல் பிரார்த்தனை செய்து வருகிறார்களோ… அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள் என்கிறது லலிதா சகஸ்ரநாமம். லலிதா என்றால் அம்பிகை. சகஸ்ரம் என்றால் ஆயிரம். திருநாமங்கள் என்றால் பெயர்கள். ஆயிரம் திருநாமங்களைக்கொண்ட் லலிதாம்பிகை, லலிதா சகஸ்ரநாமம்சொல்லி வேண்டுவது, இல்லத்தின் தரித்திர நிலையைப் போக்கும்; குழந்தைகள் கல்விகளிலும் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
‘ஓம் லலிதாம்பிகாயை நமஹ’
இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாலே லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்த புண்ணியம் கிடைக்கப்பெறலாம்! புரட்டசி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுவது கூடுதல் சிறப்பு. என்றாலும் ஒவ்வொரு வெள்ளியும் சொல்லி வழிபடுவது எண்ணற்ற பலன்களை நமக்கு வழங்கவல்லது இந்த ஸ்லோகம். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள்.
கோயிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால், பால் பாயசம் நைவேத்தியம் செய்து, பத்துபேருக்கேனும் வழங்குங்கள்.
பால் போல் நம் வாழ்க்கையும் பொங்கிப் பிரவாகிக்கும்; பாயசம் போல் நம் வாழ்க்கையின் தருணங்களை இனிக்கச் செய்வாள் லலிதாம்பிகை!