பெண்களை ஆபாசமாகப் பேசுவதுதான் அரசியலா..?

Spread the love

தெருக்குழாய் சண்டை முதல் அரசியல் மேடைகள் வரை எல்லா இடங்களிலுமே பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச வசைச்சொற்களைப் பேசுவது, இந்த ஆணாதிக்க சமூகத்துக்கு அனிச்சை செயலாகி விட்டது. இவ்வளவு முன்னேற்றங்களுக்குப் பிறகும் பெண்கள், இந்த இழிவைச் சுமந்துகொண்டே வாழ வேண்டியிருக்கிறது.

சமீபத்தில், தஞ்சாவூரில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் நோக்கில் பேசியதாகச் சொல்லப்படும் வார்த்தைகள் நிச்சயம் அவரது மாண்புக்குப் பொருத்தமற்றவை. உண்மையில், இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஜோதிமணி தொடங்கி காளியம்மாள், குஷ்பூ, இன்றைய அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி வரை… அரசியல் களத்துக்கு வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படியான அவமதிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் கடந்துதான் அவர்கள் மேலெழுந்து வரவேண்டியிருக்கிறது.

ஒருகாலத்தில் கட்சியின் மூன்றாம்தர பேச்சாளர்கள் மட்டுமே இப்படியான வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள். இன்று மூத்த தலைவர்களேகூட பெண்களை வக்கிரமாகப் பேசி கைதட்டல் வாங்கும் அநாகரிகப் போக்கு தொடர்கிறது. அரசு நிர்வாகத்தையோ பிற கட்சிகளையோ விமர்சிக்க, கேள்வி கேட்க… சித்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியாக, வரலாற்று ரீதியாக எவ்வளவோ தரவுகள் இருக்கின்றன. அவற்றை முன்வைத்துப் பேசுவதுதான் அறிவார்ந்த செயல். அப்படித்தான் இங்கே தலைவர்கள் தங்கள் கட்சிகளை வளர்த்தெடுத்துள்ளார்கள்.

ஆனால் இன்று, `பெண்களை முன்வைத்து ஆபாசமாகப் பேசினால் கைதட்டி விடுவார்கள்’ என்று தலைவர்களே நினைப்பது வரும் தலைமுறையின் அரசியல் போக்கையே மழுங்கடித்துவிடும். இந்த நிலை மாறவேண்டும். `இதெல்லாம் அரசியல் மேடையில் சகஜம்தானே’ என்கிற பொதுப்புத்திக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். யார் பேசினாலும் இதுமாதிரியான அவப்பேச்சுகளுக்கு எதிராக பெண்கள் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும்.

நீங்கள் அவமதித்துக் கொண்டாட பெண்கள் ஒன்றும் கிள்ளுக்கீரைகள் அல்ல. முன்னேறி வரும் பெண்களை இதுபோன்ற உத்திகளால் பின்தள்ள நினைக்கிற ஆணாதிக்கவாதிகள் தொடர்ந்து அம்பலப்படுவார்கள். பெண்களை ஆபாசமாகப் பேசுவது சட்டப்படி குற்றம், மன்னிக்க முடியாத சமூக குற்றம்.

இதை எல்லோருக்கும் உணர்த்துவோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *