இதையடுத்து ரஹீமா தங்கியிருந்த வீட்டை சல்லடை போட்டு ஆய்வு செய்தோம். அப்போது வீட்டில் ரத்தக்கறை படிந்த பெட் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அது குறித்து விசாரித்தபோது அமீர் அலியை கொலை செய்த தகவலை ரஹீமா ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின்படி அஸ்ரஃப் அலியைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அமீர் அலியின் டார்ச்சர் காரணமாக அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் “‘ என்றனர்.
கொலை நடந்தது எப்படி? என போலீஸ் உயரதிகாரி ஒருவர் விரிவாக நம்மிடம் விவரித்தார்.
“ரஹீமாவின் முதல் திருமண வாழ்க்கையில் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக குழந்தையையும் கணவரையும் பிரிந்த ரஹீமா, வேலை தேடி சென்னை வந்திருக்கிறார். அப்போது அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தேனாம்பேட்டை பகுதியில் தங்கியிருந்தனர். அவர்களோடு ரஹீமா தங்கியிருந்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி செய்யும் வேலையைச் செய்து வந்திருக்கிறார். அதில் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார். அப்போதுதான் அமீர் அலியுடன் ரஹீமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக ரஹீமாவின் முதல் கணவர் குறித்து பேசி அமீர் அலி, ரஹீமாவை துன்புறுத்தி வந்திருக்கிறார். மேலும் அமீர் அலிக்கு சில பெண்களுடனும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ரஹீமா மனஉளைச்சலுக்குள்ளாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அஸ்ஸாமில் நாட்டு மருந்து கடை நடத்தி வரும் அஸ்ரஃப் அலியுடன் ரஹீமாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரிடம் தனக்கு அமீர் அலியால் நடக்கும் கொடுமைகளைச் சொல்லி கதறி அழுதிருக்கிறார் ரஹீமா. அப்போது ரஹீமாவுக்கு ஆறுதலாக பேசிய அஸ்ரஃப் அலி, அடிக்கடி சென்னை வந்து ரஹீமாவையும் சந்தித்திருக்கிறார். இந்தத் தகவல் அமீர் அலிக்கு தெரிந்ததும் ரஹீமாவை அடித்து உதைத்திருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த மாதம் அமீர் அலிக்கும் அஸ்ஸாமைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்திருக்கிறது. அப்போது அமீர் அலி அந்தப் பெண்ணுடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறார். அதை ரஹீமா பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அமீர் அலியிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்போது ரஹீமாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அமீர் அலி அவதூறாகப் பேசியிருக்கிறார். இதையடுத்துதான் அமீர் அலியை கொலைசெய்ய இருவரும் பிளான் போட்டிருக்கிறார்கள்.
2.06.2026 அன்று, ஏழு தூக்க மாத்திரைகளைப் பாலில் கலந்து அமீர் அலிக்கு கொடுத்திருக்கிறார் ரஹீமா. பாலைக் குடித்ததும் மயக்கமடைந்த அமீர் அலியை இருவரும் சேர்ந்து 03.06.2026-ம் தேதி கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் சடலத்தை அப்புறப்படுத்த தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார்கள். அதை தன்னுடைய செல்போனில் ரஹீமா போட்டோ எடுத்து பார்த்து ரசித்திருக்கிறார். இதையடுத்து தலை, கை, கால்கள் இல்லாத அமீர் அலியின் சடலத்தை ஒரு சூட்கேஸில் வைத்து, 05.06.2026 அன்று காலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதன் பிறகு 06.06.2026 அன்று செங்கல்பட்டு பகுதியில் தலையை புதைத்து வைத்திருக்கிறார்கள். கை, கால் பாகங்களைத் தங்கள் வீட்டருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியிருக்கிறார்கள். இதையடுத்து அவற்றை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். கொலை செய்யப்பட்ட அமீர் அலியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். விசாரணையின் போது ரஹீமா எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி சர்வசாதாரணமாகவே இருந்தார். அதைப் போல அமீர் அலியை கொலைசெய்து கூறு போட்ட அஸ்ரஃப் அலி நாங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார். அதனால் ரஹீமா, அஸ்ரஃப் அலியின் பின்னணி குறித்து விசாரிக்க தனிப்படை போலீஸ் டீம் விரைவில் அஸ்ஸாமுக்குச் செல்ல உள்ளது. இதுவரை நடத்திய விசாரணையில் இருவர் மீதும் எந்த வழக்குகளும் இல்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது” என்றார்.