International
oi-Mani Singh S
காத்மாண்டு: நேபாளம் பெருவெள்ளத்திலும் பச்சை நிறத்திலான 4 மாடிகள் கொண்ட வீடு ஒன்று கொஞ்சம் கூட அசையாமல் நின்று தாக்குபிடித்தது. அந்த வீட்டில் வசித்து வந்த 5 பேரும் உயிர்தப்பிய நிலையில், அவ்வளவு பெரிய வெள்ளத்திலும் அந்த ஒரு வீடு மட்டும் தப்பித்தது எப்படி என பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. அது குறித்து வீட்டின் உரிமையாளர் பகிர்ந்த தகவலை பார்க்கலாம்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி போடோ கோஷி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யாருமே கணிக்காத இந்த வெள்ளத்தால் ஆற்றங்கரையோரம் இருந்த கட்டிடங்கள், வாகனங்கள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

அசையாமல் நின்ற வீடு
இமயமலை சுனாமி என்று வெள்ளத்தை நேரில் பார்த்த மக்கள் திகிலுடன் வெள்ள பாதிப்பை விவரித்தனர். கார்கள், கட்டிடங்கள், மரங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஆற்றில் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகியிருந்தன. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் சிக்கிய இரும்பு பாலங்கள் கூட கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த நிலையில், ஒரே ஒரு வீடு மட்டும் கொஞ்சம் கூட அசையாமல் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்த வீட்டை சுற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் அந்த வீடு கொஞ்சம் கூட அசையாமல் கம்பீரமாக காட்சியளித்தது. அந்த வீட்டை சுற்றி இருந்த வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மாறிப்போன நிலையில் சேறும் சகதியுமான வெள்ளநீருக்கு நடுவே அசையாமல் இருந்த வீட்டுக்குள் ஒரு குடும்பமே அச்சத்தில் உறைந்தபடி இருந்தது.
வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் பேட்டி
சுற்றிலும் வெள்ளம் அடித்து செல்லப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தப்படி திக் திக்குடன் ஆண்டவன் மீது பாரத்தை போட்டு இருந்தனர். அந்த வீடு இடிந்திருந்தால் அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்திருக்கவே வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த வீடு சற்றும் அசையாமல் அவர்கள் 5 பேர் உயிரையும் காபாற்றியுள்ளது. இணையத்திலும் இந்த வீட்டின் கட்டுமான தரம் குறித்து பலரும் பாராட்டி வந்த நிலையில் அந்த வீட்டு உரிமையாளர் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.
வீட்டு மாடியில் ஏறி நின்றோம்
வெள்ளத்தை கம்பீரமாக எதிர்கொண்ட பச்சை நிற வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வீட்டில் ஆறு பேர் வசித்து வந்தோம். நானும் அங்கேதான் இருந்தேன். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, அருகில் இருந்த ஒரு கடையில் நான் இருந்தேன். தகவல் கேட்டதும், வீட்டை நோக்கி வேகமாக ஓடினேன்.
வீட்டிற்கு உள்ளே போனதும் அனைவரும் வேகமாக வாருங்கள் என்று அழைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது கார் அடித்து செல்லப்பட்டது. உடனடியாக குடும்பத்தில் உள்ள அனைவரும் 4-வது மாடிக்கு சென்றோம். ஆனால் 4 வது மாடி வரைக்கும் வெள்ள நீர் வந்துவிட்டது. இதனால், வீட்டு மாடியில் இருந்த உயரமான ஒரு பகுதியில் ஏறி நின்றோம்.
40 ஆண்டுகள் பழமையான வீடு
இந்த வீடு 40 ஆண்டுகள் பழமையானது. அந்த காலத்தில் சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களின் தரம் அருமையாக இருந்தது. ஆற்றின் அருகே இருப்பதால் வலுவான அஸ்திவரத்துடன் தான் வீட்டை கட்டினோம். இதற்காக கணிசமான தொகையை செலவு செய்திருந்தோம். வீட்டின் அடித்தளத்துக்கு கீழேயும் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாகப் போட்டிருந்தோம்.
எனவே, வீட்டின் அடித்தளம் மிகவும் வலுவான ஒன்றாக இருந்தது. இருந்தாலும் வெள்ளத்தால் வீட்டின் கீழ்பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது. எனது கடைகளுக்கு தேவையான சரக்குகளை வைக்கும் குடோன் ஆக அதை பயன்படுத்த் வந்தோம். பெரிய அளவிலான பொருட்கள் வெள்ளத்தில் சென்றுவிட்டன. இரண்டு வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. அனைத்தும் போய்விட்டது. வெள்ள நீர் வடியும் வரை சுமார் ஒன்றை மணிநேரம் வரை சிக்கி தவித்தோம். அருகில் உள்ள டோல் பகுதியில் இருந்தவர்கள் தான் எங்களை வந்து மீட்டனர்” என்றார்.