மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரை சேர்ந்தவர் முகதா தேஷ்முக்(34), கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்பிஏ படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தனியாக வசித்துக்கொண்டு அவர் பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டு வந்தார். முகதாவுடன் அவரது பெற்றோர் போன் மற்றும் மெசேஜ் மூலம் தொடர்பில் இருந்தனர். கடந்த மாதம் 24ம் தேதி முகதா தனது குடும்பத்தினரின் போன் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது.
இதனால் கவலையடைந்த அவரது பெற்றோர், லண்டனில் உள்ள முகதாவின் தோழியைத் தொடர்பு கொண்டனர். அவர் கடைசியாக கடந்த 22ம் தேதி முகதாவுடன் மெசேஜ் மூலம் பேசியதாக அவரது தோழி தெரிவித்தார். லண்டனில் உள்ள தோழி இது குறித்து லண்டன் போலீஸை அணுகி, முகதாவை காணவில்லை என்று புகார் செய்தார். ஆனால் ஆகஸ்ட் மாத இறுதியில் முகதா இங்கிலாந்தை விட்டு வெளியேறிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முகதாவின் குடும்பத்தினர், இந்திய அதிகாரிகளையும், இந்திய தூதரக அதிகாரிகளையும் அணுகி, முகதாவை கண்டுபிடிக்க உதவி கோரினர். முகதாவின் தந்தை முகதாவின் வங்கி அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, அக்டோபர் 8 மற்றும் 25 க்கு இடையில் பல முறை உணவு விநியோக பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதைக் கண்டறிந்தார். அவற்றில் சில சத்ரபதி சம்பாஜிநகரின் ஒசாமான்புரா பகுதியில் இருந்து வந்தவை என்று தெரிய வந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்பினர்.
இதையடுத்து புனே மற்றும் சாம்பாஜி நகர் போலீஸார் முகதாவை தேட ஆரம்பித்தனர். உணவு டெலிவரி செய்யப்பட்ட முகவரி மூலம் முகதாவின் வீட்டு முகவரியை புனேயில் கண்டுபிடித்தனர். இது குறித்து பிம்ப்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திர சவான் கூறுகையில், ” நாங்கள் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை அடைந்து, ஒரு கீமேக்கரின் உதவியுடன் உள்ளே நுழைந்த போது உள்ளே அவர் இறந்து கிடந்ததைக் கண்டோம்” என்று என்றார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். முகதாவின் உடம்பில் எந்த வித காயமும் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.