பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய ரசிகர் மன்றம்; வாழ்த்திய விஜய் சேதுபதி

Spread the love

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

தவெக ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து, “இந்தக் கருத்துகள் குறிப்பிட்ட எந்த ஒரு நபரையோ அல்லது அரசியல் இயக்கத்தையோ சுட்டிக்காட்டிப் பேசப்படவில்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இந்தச் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில், தனது அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரசாத் என்பவரை விஜய் சேதுபதி நியமித்திருந்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்தல், மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அமைப்புப் பணிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை நியமித்தல், உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துதல் போன்ற பொறுப்புகளை விஜய் சேதுபதி புதிய தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரசாத்திற்குக் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் விஜய் சேதுபதியும் அரசியலில் களமிறங்குகிறாரா? என்ற கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியது.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் பாராட்டு விழாவை நடத்தி இருக்கின்றனர்.

இதற்கு விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், “நம் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை வாழ்த்தி பதக்கமும், பரிசும் வழங்கியிருக்கின்றனர்.

இதில் கலந்துகொண்ட எல்லோருக்கும் வாழ்த்துகள். இந்த வேலையைச் சிறப்பாகச் செய்த என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்பும், நன்றியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *