பொதுமக்கள் கவனத்திற்கு.. UPI-ல் ரூ.2,000 மேல் அனுப்பினால்.. கூடுதல் கட்டணம்! – Kumudam

Spread the love

யூபிஐ (UPI) மூலம் வணிகர்களுக்குச் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்காகக் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் புதிய வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) முறையை அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 15, முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிமுறைகளின் படி, ரூ.2,000-க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அதேவேளையில், பொதுமக்களுக்கு யூபிஐ பரிவர்த்தனைகள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே தொடரும்.

புதிய விதிகளின்படி, ரூ.2,000-க்கு மேலான P2M (Person-to-Merchant) பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் 0.4% கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, ரூ.3,000 பரிவர்த்தனைக்கு ரூ.12-ம், ரூ.50,000 பரிவர்த்தனைக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். அதே நேரத்தில், ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை வணிகர்கள் மட்டுமே தங்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும்; இதை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கக் கூடாது. மேலும், யூபிஐ செயலிகள் எந்தவொரு பிளாட்ஃபார்ம் கட்டணத்தையும் வசூலிக்க அனுமதி இல்லை.

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் மற்றும் அரசு பயன்பாட்டுக் கட்டணங்கள் (மின்சாரம், குடிநீர், கேஸ்) ஆகிய குறிப்பிட்ட பிரிவுகளுக்கு 0.4% சதவீதக் கட்டணத்திற்குப் பதிலாக, ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு நிலையாக ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். ரூ.2,000-க்கு குறைவான எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. இதேபோல், பரஸ்பர நிதி (Mutual Funds) மற்றும் பங்குச்சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் (அதிகபட்சமாக ரூ.300) விதிக்கப்பட்டுள்ளது.

நபர்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றங்களுக்கு (P2P – குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுப்புதல் மற்றும் சொந்தக் கணக்குகளுக்கு இடையே மாற்றுதல்) இந்தக் கட்டணம் பொருந்தாது. மேலும், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை யூபிஐ கியூ ஆர் (QR) கோட் மூலம் நேரடியாகப் பணம் பெறும் சிறு வணிகர்களுக்குக் (P2PM) கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000-க்கு குறைவான வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. இந்தியாவில் நடைபெறும் 95 சதவீதத்திற்கும் அதிகமான யூபிஐ பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2026-ல் மட்டும் யூபிஐ மூலம் 2,451 கோடி பரிவர்த்தனைகள் (ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பு) நடைபெற்றுள்ளன. யூபிஐ அமைப்பைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் ஆண்டுக்குச் சுமார் ரூ.20,000 கோடி செலவாகிறது. இதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தவும், கிராமப்புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனையை விரிவாக்கவும் பெறப்படும் இந்தக் கட்டண வருவாய் பயன்படுத்தப்படும். வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி பொருட்களின் நிஜ விலையை மட்டுமே செலுத்தி யூபிஐ-யைப் பயன்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *