‘போக்குவரத்துத் துறையில் 1,300 காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாளை உள்ளிருப்புப் போராட்டம்’ | Protest for Transport Department

1291683.jpg
Spread the love

கடலூர்: போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி நாளை கருப்புச் சட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ”போக்குவரத்துத் துறையில் உள்ள சுமார் 3,000 பணியிடங்களில் 1,300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தான் மக்கள் பணிகள் பெருவாரியாக நடைபெறுகின்றன.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பதவியில், பல்வேறு முயற்சிகள் எடுத்த பிறகு 35 பணியிடங்களில் சுமார் 5 பணியிடங்களை மட்டுமே நிரப்பியிருக்கிறார்கள். மேலும், பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கும் போது அதில் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த 35 பணியிடங்களையும் ஒரே நாளில் நிரப்பிவிட முடியும். இதற்கு அந்தந்த அலுவலகங்களிலேயே தகுதி உள்ள பணியாளர்கள் இருக்கிறார்கள். தகுதி உள்ள பணியாளர்கள் இருந்தும் உடனடியாக அனைத்தையும் நிரப்பாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் சாதகமான சூழ்நிலை போக்குவரத்து துறையில் இல்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாநிலம் முழுவதும் எல்லா மாவட்ட ஆட்சியர்கள் மூலம் போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பின் கோரிக்கை மனு உள்துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட 14 சரக அலுவலகங்களில் அனைத்துப் பணியாளர்களும் கருப்புச் சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு மாநில பொருளாளர் சுவாமிநாதன், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *