ஒரு நிமிஷம் அங்கே நிலவிய அமைதி அனைவரையும் என்னவோ செய்தது. பாலு ,சின்னசாமி மனைவிகளுக்கு அவர்கள் மேல் கோபம் வந்தாலும் ஏனோ பாவமாகவும் இருந்தது.
டாபிக் தடம் மாறுவதை உணர்ந்த நாகராஜன் “டேய் ! சொல்ல மறந்துட்டேன். நம்ம சுரேஷ், குருசாமி ஜெயபால் சிவானெல்லாம் டி சர்ட்டும் பர்முடாசும் போட்டுட்டு நைட்டு டான்ஸ் ஆடப்போறதா காலையில் பேசிகிட்டிருந்தாங்க, “
அதான் நாங்க..,…”இரு இரு அப்ப நாங்க!? முதலே சொல்லிருந்தா நாங்களும் அதெல்லாம் எடுத்துட்டு வந்திருப்பமல்ல.அப்ப இருந்த உங்க நால்வர் கூட்டணி இப்பவும் மாறவே இல்லன்னு தெரியுதடா .போங்கடா டேய்!. நீங்களும் உங்க ஆட்டமும்” என்று ஆதங்கப்பட்டார் மகாலிங்கம்.
“இப்ப என்ன பிரச்னை?எல்லாரும் பர்முடாஸ் , டி சர்ட் போட்டுட்டு டான்ஸ் ஆடணும் ,அவ்வளவு தானே, சங்கடப்படாதீங்கடா ,ஐம்பது ஐம்பத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பாக்குறோம் சந்தோஷமா இருப்பம்பா,மத்தியானமே அதெல்லாம் வந்தாச்சு . எல்லாரும் ஒன்னா உள்ளாற போய் அளவு சரிபார்த்து போட்டுட்டு வரலாம்
வாங்க. மாலைநேர காத்த கொஞ்சம் ஜாலியா அனுபவிப்போம்”என்றார்
கோவிந்தராஜ்.
“எப்படறா!எப்ப எப்பிடி இதெல்லாம் நடந்துச்சு?நம்பவே முடியல”.எல்லோருக்கும் ஆச்சரியம்.
” அதெல்லாம் அப்படி தான். கார்த்தாலே அவங்க நாலு பேரும் பேசிட்டிருந்தாங்கன்னு சின்னசாமி சொன்னதும் நாங்க ஏற்பாடு பண்ணிட்டோம். நம்ம பழனிசாமி மகன் ஜெயகுமார் திருப்பூரில் பனியன் கம்பெனி இன்சார்ஜா இருக்கான். உத்தேசமா உங்க அளவுகளை கணிச்சு சொன்னதும் அவன் இருபத்தஞ்சு செட் டிரஸ் ஆள் மூலம் உடனே அனுப்பிட்டான்.
ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு யார்
கிட்டயும் சொல்லலே, ஆனா எல்லார்த்துக்குமே அளவெடுத்து தெச்ச மாதிரி கரெக்டா இருக்குடா, என்றனர்.
“பெரியாளுடா நீங்க! சரி சரி யாரும் எதுவும் காட்டிக்காதீங்க. இந்தப் பொம்பளைக திடீர்னு நம்மள இப்படி பார்த்து ஆச்சரிய,மும் பொறாமையும் படட்டும் ,”என்று சிரித்து ஒன்றாக சேர்ந்து பலமாக விசிலடித்தனர் .
சத்தம் கேட்டு கதவைத்திறந்து
வெளியே வந்த பெண்களைப் பார்த்து இவர்களுக்கு மயக்கமே வந்துவிட்டது.
ஒன்னுபோல எல்லாரும் சுடிதார் போட்டிருந்தார்கள்.இது …..இது எப்பிடி இருக்கு என்பது போல் இருந்தது அவர்கள் பார்வை.
” உங்களுக்கு மட்டும் தான் சர்ப்ரைஸ் கொடுக்க தெரியுமா? மத்தியானம் திருப்பூர் பார்சல் வந்ததுமே,விவரத்தை தெரிஞ்சு கிட்ட நாங்க நாலுபேர் கிளம்பி பெதப்பம் பட்டி போய் எங்க எல்லார்த்துக்கும் எடுத்துட்டு வந்தோம்”,இந்திராணியும்
சரசும் சொன்னார்கள்.
“டேய்! நம்மளை எல்லாம் மிஞ்சின கில்லாடிகளா இருக்காங்கடா, நாம தான் ஜாக்கிரதையாக இருக்கணும் போல ” என்ற மௌனசாமிக்கு மற்றவர்கள்தலையசைத்தார்கள்.
பின்னர் இசை நாற்காலி போட்டி தனித்தனியாக நடந்தது.இதில்
ஜெயித்த முதல் மூன்று நபர்களை சேர்த்து மீண்டும் சுற்ற விட்டார்கள். இறுதியில் முதல் மூன்று இடங்களும் பெண்களே வென்றனர். சுடிதார் போட்டு ஓடியதால் தான் ஜெயிச்சீங்க என்று ஆண்கள் அணி குற்றம்சாட்ட
அங்கு சிறு சலசலப்பு வந்து போனது.
பால் கறந்து விட்டு வந்த விஜயன்
இதை பார்தது சந்தோஷப்பட்டு “விளையாட்டு எல்லாமே அருமை அண்ணா, நாளைக்கு என்னபண்ணப் போறீங்க? என்று கேட்க,”பாட்டுக்கு பாட்டு , ஒயிலாட்டம்,கும்மி எல்லாம் பிளான் பண்ணிருக்கோம்” என்றனர்.
“அண்ணாண்ணா! ஒயிலாட்டத்துக்கு
நானும் வர்றேண்ணா, முதலெல்லாம்
செஞ்சேரிமலை தேரு, சந்திராபுரம் சிவராத்திரி நோம்பிக்கெல்லாம்
ஊர்க்காரங்களே ஆடுவாங்க , இப்பல்லாம் காசு குடுத்து குரூப்பை கூட்டிட்டு வர்றாங்க. அது நல்லால்லே.சொசைட்டிக்கு சீக்கிரம் பால் சப்ளை பண்ணிட்டு நானும் வந்து ஜாயின்பண்ணிக்கிறேன்”
என்ற விஜயனுக்கு ஓகே செய்தனர்.
இரவு உணவு எளிமையாக முடிந்தது .மதியம் மீதியான உணவுடன் கொஞ்சம் உப்புமா தயிர் போதும்என்றுசொல்லிவிட்டனர்.பின்பு ரெண்டு வெளிப்புற திண்ணையிலும் ஆண்கள் படுத்துக்கொண்டனர். பெண்கள் உள்ளே தொட்டிக்கட்டு வராண்டாவில் உறங்க சென்றனர். பத்து நிமிடம் கழித்து சுந்தரியும் அன்னபூரணியும் எக்ஸ்ட்ரா தலையணை இல்லாமல்இவர்கள்
தூங்க மாட்டார்களே என்று கூறி வெளியில் வந்து பார்த்தால் தலையணைகள் எல்லாம் ஒரு ஓரத்தில் கிடந்தன. எல்லோருமே கையை தலைக்கு கீழ் வைத்து ஆனந்தமாக தூங்கியது ஆச்சரியமாக இருந்தது.
மிக நீண்ட நாட்களுககுப் பிறகு நிம்மதியாக உறங்கியதாக மறுநாள் எல்லாரும் உற்சாகத்துடன் கூறினார்கள்.
“அப்படியே வேப்பம்குச்சியலெ பல் வெளக்கிட்டு கொஞ்ச தூரம் காலாற நடந்து வெளியே போயிட்டு பம்புசெட்லே குளிச்சிட்டு வருவோம் என சிலர் துண்டை எடுத்துட்டு கிளம்ப”டோன்ட் மோட்டிவேட் ஓப்பன் ஏர் டெபிகேஷன்(open air defecation) என புருஷோத்தமன் தடுக்க “அவன் கிடக்கறான் வாங்கடா நீங்க! என மற்றவர்கள் மறைவிடம்சென்றார்கள்.
ஏதோ சத்தம் கேட்டு திரும்பினால்
“டேய்! நானும் வர்றெண்டா ,விட்டுட்டு போகாதீங்க”ன்னு,புருஷோத்தமன் மூச்சிரைக்க ஓடி வந்ததை பார்க்க சிலருக்கு பாவமாகவும் சிலருக்கு கிண்டலாகவும் இருந்தது.
திரும்பி வந்தவுடன் வரதராஜ், சோளப்பணியாரம்,முடக்கத்தான் தோசை, கரைச்ச பழைய சோறு சின்ன வெங்காயம் பிரண்டை சட்னி, தக்காளி குழம்பு,தண்ணிச்சட்னி,
புதினா டீ தந்து உபசரித்தார்.
பின்னர் சிலர் டிராக்டர்ஓட்டிப்பார்க்க, சிலர் மாமரத்தில் ஏற முயன்றனர்.
சிறிது நேரம் அடுத்தவரது சிறு வயசு குறும்புகள்,குசும்புகள்அலசப்பட்டன.ஆனால் யாருமே எதற்குமே
வேறறுமை பாராட்டவில்லை.
சொந்தங்கள்,சொத்துகள்,படிப்பு,
வேலை, பொழுதுபோக்கு எதைப்
பற்றியும் விவாதிக்கவில்லை.முதல் நாள் தவிர மற்றபடி புகை,மது போன்றவை பக்கம் யாருடைய
நினைவும்செல்லவில்லை.பள்ளிப்
பருவ வயதையும் அனுபவத்தையும் ஆனந்தமாக திரும்ப உணர்ந்தனர்.
மதியம் பரிமாறப்பட்ட ராகி களி, கருவாடுகத்தரிக்காய்குழம்பு,நிலக்
கடலைசட்னி ,சாதம்,பதினாதொக்கு பலாக்கொட்டைஅவரைப்பருப்பு மசியல்,வெத்தலை ரசம் , தயிர் அனைத்தும் அமிர்தமாக இருந்தது.
சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பெண்கள் தங்களை கண்டு கொள்ளாமல் அவர்களுக்குள் கூட்டாக இருந்ததை சிலாகித்து பேசினர். நாலுமணிக்கு அனைவரும் மெயின்ரோடு வரை நடந்துட்டு வந்து கோதுமை கச்சாயம் , தினை முறுக்கு, வேகவைத்த நிலக்கடலை சாப்பிட்டு சுக்குப்பால் குடித்தனர்.
பின்னர் ஆண்களும் பெண்களும்
எதிரெதிர் அமர்ந்து பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தப்பட்டது.போட்டி அமைப்பாளராக தோட்டத்தில் வேலை பார்க்கும்(சினிமா பாடல்களை நன்றாகப்பாடுபவர்) சொக்கப்பன்
இருந்தார். சுவாரசியமாக நடந்த போட்டியில் பெண்கள் அணி வென்றது. பிறகு ஒவ்வொருவரும் சீட்டுகளில் எழுதியிருந்ததை நடித்துக் காட்டினர். இதில் மட்டும் ஆண்கள் ஜெயித்தனர்.
இரவு உணவுக்குப் பின் வேட்டி
கட்டிக் கொண்டு கையில் சிறு துண்டுடன் ஒயிலாட்டத்துக்கு தயார்
ஆனார்கள்.பால்கார விஜயனுடன்
பக்கத்து தோட்டப்பெரியவர்கள் நாலு
பேரும் சேர்ந்து கொண்டனர். ஆடத்தெரியாமல் இருந்தவர்களும் சிறிது நேரம் கவனித்துப்பாத்து வந்து சேர்ந்து கொண்டார்கள். ஆட்டம் செமையாக இருந்ததைப்பாத்து எல்லாருக்கும் புதுமையாகவும் பெருமையாகவும் இருந்தது. பாடல்பாடிய சொக்கப்பன் பாராட்டு மழையில் நனைந்தார்.
அப்புறம் பெண்கள் எல்லாம் பின்கொசுவம் வச்சு சேலை கட்டிக் கொண்டு நாட்டுப்புற பாடல் புகழ் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாட்டுக்கு சூப்பரா கும்மியடித்தார்கள்.
எழுந்த கைதட்டலும் ஆரவாரமும் ஆடு மாடு கோழிகளை கூட தலை தூக்கி பார்க்கவைத்தது.
அடுத்த நாள் காலையில் எழும்போதே எல்லோரிடமும் ஏக்கமும் சோகமும்தலை தூக்கி இருந்தது. வரதராஜ் வந்து பலமுறை வற்புறுத்திய பிறகே மூலிகை டீ (செம்பருத்திப்பூ,சங்குப்பூ , புதினா, துளசி,கற்பூரவல்லி எலுமிச்சை இலை சுக்கு மல்லி சேர்ந்தது)குடித்தனர். காலை உணவும் மனசில்லாமல் உள்ளே இறங்கியது. பதினோரு மணிக்கு கார்கள் வந்து விட்டன. போகும் வழியில் மதிய உணவுக்கு கறிப்பலாபிரியாணி,உருளைக் கிழங்கு வறுவல், கம்புத்தயிர்சோறு, நார்ததங்காய் ஊறுகாய் ,மசாலா மோர் ,தண்ணீர் அனைத்தும் பார்சல் செய்து கொடுக்கப்பட்டது.
எவ்வளவோ போராட்டத்துக்குப்பின்
துணிமணிக்கான செலவு வற்புறுத்தி செல்வானிடம் திணிக்கப்பட்டது. சமையல் வேலைக்கு வாரப்பட்டி வரதராஜ் வந்தவர்களிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார். சொக்கப்பன் மட்டும் அவர்களின் அன்பளிப்பை ஏற்றுக்கொண்டார். பெண்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடிச்சுட்டு கண்ணீர் விட்டனர். ஆண்களோ பேசமுடியாமல் கண்களாலேயே விடைபெற்றனர்.
ஆடு மாடு கோழிகள் எல்லாம் தலையசைத்து அனுப்பி வைத்தன.
இனி எப்போது சந்திப்போமோ என்ற ஏக்கம் அனைவரிடமும் இருந்தது.
சீசன் முடிந்து பறவைகள் பறந்து சென்றுவிட்ட வேடந்தாங்கல் போல் வெறிச்சோடிப்போனது அந்த தோட்டமும் ,தொட்டிக்கட்டு வீடும். வரதராஜும் விஜயனும் இந்த புது அனுபவத்தை பெருமைப்படுத்தி
பேசினார்கள். வரதராஜ் பேசிய தொகையில் பாதி மட்டுமே போதும்
என்று மன்றாடி முழு திருப்தியுடன்
பெற்றுக்கொண்டார். அவரது உதவியாளர் குணா தான் எடுத்த போட்டோக்கள்,வீடியோக்களை வெளியிலிருக்கும் அவரின் மகனுக்கும் மகளுக்கும் அனுப்பி விட்டதாக கூறி சந்தோஷப்பட்டார்.
செல்வானும் கோயிந்தனும் ஜெயபாலும் ” அனுபவிச்சு ஜெயிச்சோம்டா தேவா!”என்று பெருமைப்பட்டு சென்றனர் .
“என்னங்க! எல்லாரும் கிளம்பிட்டாங்க,பனி பெய்யுது, எந்திரிச்சு உள்ள வந்து படுங்க.”
என்று சொல்லி திரும்பிப்பார்த்த கண்மணி , கணவர் இன்னும் அந்த நினைவுகளிலிருந்து மீளவில்லை என்றுணர்ந்து தொந்தரவு செய்யாமல் எழுந்து போனாள்.
பகல் போல் ஒளிவீசிக் கொண்டு இருந்த நிலாவும் நாமும் தொந்தரவு தரக்கூடாதென மேகத்துக்குள் மெல்ல நுழைந்துமறைந்து சென்றது.
-நீலவேணி தேவராஜன்,