மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ‘ஹவுதி’ கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ‘பாப் அல்-மண்டேப்’ (Bab el-Mandeb) ஜலசந்தியில் உள்ள ‘பெரிம்’ (Perim) தீவைக் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் ஹனிஷ் தீவு, மொகா மற்றும் துபாப் ஆகிய கடலோர நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது செங்கடல் பாதையிலும் ஹவுதிக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சவூதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சவூதியின் ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் வியாழக்கிழமை காலை ட்ரோன் மூலம் தாக்கப்பட்டன. இதில் சிலர் காயமடைந்துள்ளதுடன், சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று இராக் பிரதமர், அந்நாட்டின் மைசான் (Maysan) மாகாண ராணுவ தளபதியை பதவியிலிருந்து நீக்கியுள்ளார். மேலும், ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள ‘ஷாலம்சே’ (Shalamcheh) சோதனைச் சாவடியையும் இராக் அரசு உடனடியாக மூடியுள்ளது.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஅரேபிய தீபகற்பத்தை முழுமையாகக் கடந்து செல்லும் 1,200 கிலோமீட்டர் நீளம் கொண்ட ‘கிழக்கு-மேற்கு கச்சா எண்ணெய் குழாய் (East-West Pipeline)’ செயல்பாட்டை சவூதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ‘எண்ணெய் குழாய் தடம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி ஆற்றல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் இராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டதாக சவூதியும் இராக்கும் தெரிவித்துள்ளன.

சவூதி அரசின் இந்த நடவடிக்கையால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. மேலும், சவூதியின் இந்த பிரதான குழாய் மூலம் நாளொன்றுக்கு 40 முதல் 50 லட்சம் பேரல் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இது உலகளாவிய விநியோகத்தில் 4% முதல் 5% பங்காகும். அதுவும் தற்போது தடைபட்டிருக்கிறது. மேலும், தொடர் தாக்குதல்கள் காரணமாக சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் சரிந்துள்ளதாக சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கவலை தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி வழங்க வேண்டும் என சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், தற்போதைக்கு நேரடியாக ராணுவ நடவடிக்கையில் இறங்க அமெரிக்கா மறுத்துவிட்டது என்றும், உளவுத்துறை தகவல்கள் மற்றும் இலக்குகளைக் கண்டறிவதில் மட்டும் உதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழ்நிலைமை தீவிரமடைந்துள்ள போதிலும், இராக் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சவூதி அரேபியா இதுவரை எந்தப் பழிவாங்கும் தாக்குதலையும் தொடங்கவில்லை. இருப்பினும், தனது தேசிய நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளதாக சவூதி வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதனால், போர் இன்னும் தீவிரமாகும் எனக் கருதப்படுகிறது.