லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள எலிஃபெண்ட் அண்ட் கேசில் பகுதியில் அமைந்திருக்கும் 45 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 27-05-2026 அன்று இந்த விபரீதம் நடந்துள்ளது.
இதில் 47 வயதான ராகேஷ் பாய், 46 வயதான அவர் மனைவி அதிதி பரல்கர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் சித் ஆகிய மூவரும் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் மகன் சித், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, பேசும் திறனை இழந்து நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலுதவி மற்றும் தீவிர மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மூவரும் இறந்துவிட்டனர். இந்த மரணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் லண்டன் மாநகரக் காவல் துறை, இதில் வெளிநபர்கள் எவருக்கும் தொடர்பில்லை என்றும், இது தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்து நிதி மற்றும் கட்டுமானத் துறைகளில் தங்களது சொந்த ஆலோசனை நிறுவனங்களை நடத்தி வந்த இத்தம்பதியினர், தங்களது மகனின் தீவிர மருத்துவ நிலைக்குப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பலனளிக்காததால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
குறிப்பாக, மகனைப் பராமரித்து வந்த அதிதி, தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கடுமையான சூழல் காரணமாகவே அவர்கள் இத்தகைய விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் லண்டன் காவல் துறை தொடர்ந்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.