மகா(ன்) பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – Kumudam

Spread the love

மகா(ன்)பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா?

– ஜெயாப்ரியன்

பட்டு என்றால் பெண்களுக்குப் பிடிக்கும். பாலியஸ்டர் என்றால் ஆண்களுக்குப் பிடிக்கும்! எந்த மாதிரியான துணியில் உடை அணிவது சிறந்தது? இதோ பரமாசார்யார் சொல்வதைக் கேளுங்கள்.

“இந்த உலகத்துல எல்லாருக்குமே வஸ்திரம் உடுத்திக்கறதுன்னு வழக்கம் ஆகிடுத்து. இது ஆதியில எப்படியாவது இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்துல வஸ்திரத்துக்கான துணி, பல வகையிலயும் தயாரிக்கப்படறது. பரதேசத்துல இருந்து வர்ற துணிகள் லேசாவும் பளபளப்பாவும் இருக்குங்கறதால எல்லாரும் அதுக்குதான் ஆசைப்படறா.

அதனால, நம்ம தேசத்து அடையாளம் அழிஞ்சுண்டே போறது. நான் இனிமே சுதேசி ஆடை அதாவது கதராடைதான் உடுத்திக்கறதுன்னு தீர்மானிச்சுட்டேன். இப்போ தனுஷ்கோடியில ஸ்நானம் பண்ணிட்டு, முதல் வேலையா கதரை உடுத்திக்கப் போறேன். நீங்களும் கதராடை அணிஞ்சுக்கறதை வழக்கமாக்கிக்கணும். அதுதான் நம்ம பாரத தேசத்தோட வஸ்த்ரம்.

இந்த சமயத்துல இன்னொரு விஷயத்தையும் சொல்லிடறேன். இந்தக் காலத்துல பொம்மனாட்டிகளுக்கு பட்டுமேல ப்ரியம் அதிகமா இருக்கு. அதோட சுவாமிக்கான வஸ்திரம் கூட பட்டுல வாங்கிக் குடுக்கறா. ஒரு தோலா (சுமார் 450 கிராம்) பட்டு ஒரு புடவைக்கு தேவைப்படும்னா, அதை எடுக்க பல ஆயிரம் பட்டுப்பூச்சி கொல்லப்படறதாம். நாம பளபளன்னு உடுத்திக்க இத்தனை உயிர்களைக் கொல்லணுமா?

அகிம்சா பட்டுன்னு ஒண்ணு இருக்காம். பட்டுப்பூச்சி கூட்டைப் பிய்ச்சுண்டு போனபிறகு அதுல இருந்து எடுக்கறது. என்ன, கொஞ்சம் முடிச்சு முடிச்சா இருக்கலாம். ஜீவ ஹிம்சை செஞ்சு எடுக்கறதைவிட இது தேவலை இல்லையா?

அதனால, இனிமே ஸ்ரீமடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜைக்கு கூட அஹிம்சா பட்டுதான்னு சொல்லிட்டேன். பெண்களும் புரிஞ்சுண்டு அஹிம்சா பட்டை உடுத்திக்க ஆரம்பிச்சா, பூச்சிகளைக் கொல்றது குறையும். பாவச்சுமையும் ஏறாது!”

(1918-இல் தனுஷ்கோடியில் காஞ்சி மகான் சொன்னது) 

(பிரசாதம் மணக்கும்) 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *