மகாராஷ்டிரா சட்டமேலவைக்குக் காலியாக இருக்கும் 17 இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த எதிர்க்கட்சி வேட்பாளர்கள் 8 பேர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர்.
ஒருவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆளும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களை போட்டியில் இருந்து வெளியேற்ற பா.ஜ.க கூட்டணி ரூ.150 கோடி செலவிட்டு இருப்பதாக சிவசேனா(உத்தவ்) குற்றம் சாட்டி இருக்கிறது.
இது குறித்து அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத் இது குறித்து அளித்த பேட்டியில், “‘எதிர்க்கட்சி வேட்பாளர்களை போட்டியில் இருந்து வெளியேற்ற ரூ.150 கோடியைச் செலவிட்டு இருக்கிறார்கள்.
போட்டியில் வெற்றி பெறுவதற்குத் தேவையான செல்வாக்கு இருக்கிறது என்றால் ஏன் இந்த அளவுக்கு பணம் செலவிட வேண்டும். ஏன் குதிரை பேரத்தில் ஈடுபடவேண்டும். கொங்கன் பகுதியில் ஒரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலக ரூ.25 கோடி செலவிட்டு இருக்கிறார்கள். இதில் ரூ.15 கோடி மும்பையில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கைமாறி இருக்கிறது.
இது போன்ற செயல் ஜனநாயகத்தின் முதுகில் குத்துவது போன்றதாகும். போட்டியின்றி நடத்தப்படும் தேர்தல்கள், வற்புறுத்தல் அல்லது நிதி லஞ்சங்கள் மூலம் அல்லாமல், ஒருமித்த கருத்து மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
மேலும், நாசிக் மற்றும் சோலாப்பூர் தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களுக்கும் போட்டியிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளது. எங்களது கட்சியில் போட்டியில் இருந்து விலகியவர்கள் துரோகிகள்” என்றார்.
கொங்கன் பகுதி உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் பால் மானே போட்டியில் இருந்து விலகியது குறித்து அளித்த பேட்டியில், உட்கட்சி பிரச்னை மற்றும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமை போன்ற காரணத்தால்தான் போட்டியில் இருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமுள்ள 17 தொகுதியிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பா.ஜ.கவும், சிவசேனாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.