கடந்த பிப்ரவரி இறுதியில் மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்தில் துணை முதல்வராக இருந்த அஜித்பவார் அகால மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். அதோடு அஜித்பவார் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராமதி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட்டார்.
இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டதில் சுனேத்ரா பவார் 1,18.034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 1,18,969 வாக்குகள் பெற்று இருந்தார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாக வேட்பாளரை நிறுத்தவில்லை.
ராஷ்ட்ரீய சமாஜ் கட்சி வேட்பாளர் குடுகடே 935 வாக்குகள் பெற்று இருந்தார். இது தவிர நோட்டாவிற்கு 774 வாக்குகள் கிடைத்தது. இதற்கு முன்பு பாராமதி தொகுதியில் அஜித்பவார் மற்றும் சரத்பவார் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தனர்.

அவர்கள் வெற்றி பெற்ற வாக்கு எண்ணிக்கை சதவீதத்தை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுனேத்ரா பவார் வெற்றி பெற்று இருக்கிறார். 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அஜித்பவார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கோபிசந்த் பதல்கரை வீழ்த்தினார்.
அது அப்போது மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வாக்கு வித்தியாச வெற்றியாகக் கருதப்பட்டது. அதே சமயம் 1990ம் ஆண்டு தேர்தலில் பாராமதியில் சரத் பவார் 75% வாக்குகள் பெற்றார். ஆனால் தற்போது சுனேத்ரா பவார் பெற்றுள்ள வெற்றி நாட்டிலேயே அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
1962ம் ஆண்டு தவிர, பவார் குடும்பம் பாராமதியில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சரத் பவார் 1967 முதல் 1990 வரை அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மகன் அஜித் பவார் 1995 முதல் அத்தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றாலும், சரத்பவார் பெற்ற 75% வாக்கை அஜித்பவார் ஒரு முறைகூட பெறவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தலில் சுனேத்ரா 98% வாக்குகளைப் பெற்று, பவாரின் நீண்ட கால சாதனையை முறியடித்தார்.