அவர் தொடர்ந்து பிராசரங்களில் பேசும்போது, “மற்ற மாநிலங்களைப்போல லாப நோக்கில் அல்ல, சேவை நோக்கில்தான் நாங்கள் மக்கள் போக்குவரத்தை நடத்துகிறோம். மக்களின் வசதியைக் கருத்தில்கொண்டே, வால்வோ பேருந்துகள் இப்போது தமிழகம் முழுவதும் வலம்வருகின்றன.
பெரம்பலூருக்கு அருகே புதிய ஷூ தொழிற்சாலை தொடங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. வேலை தேடி வெளிநாடு, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சி செய்கிறோம்” என்றார்.
அதோடு, “கல்விக்காக இந்தத் தொகுதிகளில் பல பணிகளை முன்னெடுத்திருக்கிறேன். அவை எனக்கு மனநிறைவைத் தருகின்றன. 10, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக, தேர்வுக் கையேடு மெட்டீரியல் கொடுக்கிறோம். அது பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆகியிருக்கிறது.
நான் பள்ளிக்குப் போகும்போது அந்தத் திட்டத்தை ஆசிரியர்களே பாராட்டுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள். ஒரு கிராமத்தில், பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம் வந்து `எங்க ஸ்கூல் நேரத்துக்கு நீங்க பஸ் விட்டீங்க… அதுக்கு ரொம்ப நன்றி’ என்று சொன்னார். அந்த நன்றி என்கிற வார்த்தையைத்தான் எனக்கான மனநிறைவாகப் பார்க்கிறேன்” என்று பேசும்போதே, அவரின் குரல் நெகிழ்கிறது.
தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் குறித்துப் பேசும்போது, “ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதிய முகம் வரும். அது ஒரு மாற்று எனக் கூறப்படும். ஆனால், மக்கள் இறுதியில் நிலையான ஆட்சியையே தேர்வுசெய்கிறார்கள். சிலர் கூறும் `விஜய் அலை’ அது ஒரு தேர்தல் நேர பேசுபொருள் மட்டுமே. முடிவில்தான் மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது தெரியவரும்” என்றார்.
குன்னம் பகுதி மக்கள் நம்மிடம் பேசும்போது, “அமைச்சர் சிவசங்கரின் தொகுதி தன்னிறைவான தொகுதி. குறிப்பாக, எங்கள் தொகுதியில் புதிய சாலைகள், கழிவறை வசதிகள், சீரான குடிநீர் விநியோகம் செய்து கொடுத்திருக்கிறார். பேருந்து வசதிகள் அதிகமாகின. பெண்களுக்கு மாதாந்தர உதவித்தொகையால் பல பெண்களுக்குப் பொருளாதார உதவி கிடைத்திருக்கிறது’’ என்றார்கள். “முன்பு வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது; இப்போது சீராகக் கிடைக்கிறது” என்கிறார்கள் சிலர்.

குன்னம், முன்பு ஒரு பின்தங்கிய பகுதியாக இருந்தது. இப்போது வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் இந்தத் தொகுதிக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றன.
நான் கடந்த காலத்தில் இந்தத் தொகுதிக்குச் செய்த சேவைகள்தான் மக்களுக்கு என்மீதான நம்பிக்கையை அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. என் தொகுதி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
“குன்னம் தொகுதியின் வளர்ச்சிப் பயணம் தொடர வேண்டும். அதற்கு மக்களின் ஆதரவு வேண்டும்’’ என்று அமைச்சர் தனது வேண்டுகோளை முன்வைக்கிறார்.