மக்களே உஷார்… இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் எச்சரிக்கை ! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 10) பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

இன்று (நவம்பர் 10) இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது!

இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *