“மக்கள் நிராகரித்துவிட்டார்கள்; திமுக-வினர் வேதனையில் புலம்பல்.!” – துரை வைகோ பேட்டி | Exclusive

Spread the love

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம்.

“தவெகவின் ஆதரவு கட்சிகளின் முதல் கூட்டம் இது. இதை ஆலோசனை கூட்டமென எடுத்துக் கொள்ளலாமா? இல்லை ஒரு புதிய கூட்டணி உருவாகிவிட்டதா?”

“நிச்சயமாக புதிய கூட்டணி உருவாகிவிட்டது. அதை வெளிக்காட்டும் கூட்டம்தான் இது. தவெக-வை முழுமையாக ஏற்றுக் கொண்டதால் மட்டும்தானே அவர்களின் அழைப்பை ஏற்று இங்கே கூடியிருக்கிறோம்.”

“திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தீர்கள். முடிவுகளுக்கு பிறகு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மதிமுக முகாமில் உற்சாகம் அதிகமாக இருக்கிறதே?”

“கண்டிப்பாக, குறிப்பாக நான் ரொம்ப ரொம்ப உற்சாகமாக இருக்கிறேன். `அரசியல் ஒரு நச்சு. இங்கே நேர்மைக்கு இடம் இருக்காது” எனும் கருத்தை கொண்டிந்தவன் நான். எங்கள் கட்சியின் நிர்வாகிகளின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டேன். அரசியல் மொத்தமும் ஊழலால் புரையோடியிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இருபெரும் கட்சிகளின் மீது மக்களுக்கு பெரிய சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனில், நீங்கள் ஏன் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தீர்கள் என கேள்வி கேட்பீர்கள்.

பணமயப்பட்ட அரசியல் சூழல் எங்களை போன்ற சிறிய இயக்கங்களுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. பெரிய கட்சிகள் ஒரு எம்.எல்.ஏ தொகுதிக்கு 15 கோடியும் எம்.பி தொகுதிக்கு 40 கோடியும் செலவு செய்கின்றனர். இதற்கு மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றுதான் ஐயா மூப்பனார், வைகோ போன்றவர்கள் மூன்றாவது அணி கட்டினார்கள்.

ஆனால், அந்த அணிகளால் மக்களின் நம்பிக்கையை முழுமையாக பெற முடியவில்லை. ஆனால், விஜய் இன்றைக்கு அதை சாதித்து காட்டியிருக்கிறார். விதிகளுக்கு புறம்பாக ஒரு பைசா கூட செலவளிக்காமல் தவெக வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக சொன்னதைப் போலவே மிக நேர்மையான ஒரு ஆட்சியை விஜய் நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை போன்றவற்றில் கமிஷன் கலாசாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச லாவண்யம் இல்லாத நிலையை கண்டு மக்களே மனம் மகிழ்ந்து போயிருக்கின்றனர். நாங்களும் அதனால்தான் உற்சாகமாக இருக்கிறோம்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *