விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகரை விதவிதமாக அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இயற்கையில் கிடைக்கும் பொருள்களையே விநாயகராக மாற்றினால்? இந்தக் கேள்விக்கான அழகான பதிலாக அமைந்தது, விகடன் நடத்திய “Organic Vinayagar Contest 2026′!
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, செப்டம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த டிஜிட்டல் போட்டிக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. இந்தியா முழுவதிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்து குவிந்ததோடு, எல்லைகளைக் கடந்து கனடாவிலிருந்தும் ஒரு பதிவு வந்தது.
இந்தப் போட்டியின் ஹைலைட்டே பங்கேற்பாளர்களின் கற்பனைதான்!
பரிசுக்குத் தேர்வான ஐந்து படங்கள்
மஞ்சள், பூக்கள், இலைகள், பருப்பு வகைகள், அரிசி மாவு, கோதுமை மாவு, களிமண், வெல்லம் என இயற்கைப் பொருள்கள் ஒவ்வொன்றும் விநாயகர் உருவம் பெற்றன. அதிலும், பழங்களைச் செதுக்கி உருவாக்கப்பட்ட விநாயகர்கள் பார்த்தவர்களை வியக்க வைத்தன.
“இதையும் வைத்து விநாயகர் செய்ய முடியுமா?” என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு படைப்பிலும் புதுமை! குறிப்பாக, குழந்தைகள் காட்டிய உற்சாகமும் கற்பனைத்திறனும் இந்தப் போட்டிக்கு தனி அழகு சேர்த்தன. வீட்டில் கிடைத்த பொருள்களை வைத்தே தங்களுடைய கற்பனையில் விநாயகரை உருவாக்கிய குட்டீஸின் படைப்புகள், கலைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அழகாகச் சொல்லின.