மதிமுக பொதுக்குழுக்கூட்டம் நேற்று (ஜூன்.27) நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 9 ஆண்டுகள் பயணித்து வந்த திமுக – மதிமுக கூட்டணி முடிவுக்கு வந்தது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
“அன்புத் தலைவர் வைகோ அவர்களே உங்களை உண்மையாக நேசிக்கிறேன்…
கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றிபெறச்செய்த கடையநல்லூர் தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வருகின்ற உணர்வினை மதித்தும், தலைவர் வைகோ அவர்கள் மீதோ, சட்டமன்ற உறுப்பினரான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம்.
தங்கள் அறிவுரைப்படி சட்டமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. கட்சி உணர்வோடு நான் இயங்கி வருவதையும், பேசியதையும் பாராட்டிச் சொன்னீர்கள்.
எனது சட்டமன்றச் செயல்பாடுகள் தகுதி நீக்கத்திற்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம்.

இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் ஆறு மாதம் பொறுத்து இருப்போம்.
தவிர, கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். மேற்கண்ட தகவல்களையும், இன்னும் சில பல செய்திகளையும் தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் கண்ணீருடன் முறையிட்டேன்.
அதன் பின்னர் இரவு தலைவர் வைகோ அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை கழகப் பொருளாளர் மூலம் தலைவர் கவனத்திற்குச் சொல்லி உள்ளேன்.
42 ஆண்டுகளாக தலைவர் வைகோ அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும், விசுவாசமும் உண்மையானது.

அதேபோல் வாக்களித்த மக்கள் பெருமைப்படுகின்ற வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கின்ற வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்று தொகுதி மக்களிடம் நானும், தலைவர் வைகோ அவர்களும் பேசி ஏற்படுத்தி வைத்திருக்கும் நம்பிக்கையும் உண்மையானது..
எஞ்சியுள்ள நம் வாழ்வில் எவ்வித களங்கமும் சுமக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து..
தலைவர் அவர்களே! எனது மேற்கண்ட கருத்துகள் உங்கள் நலனையும் உள்ளடக்கியது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.