சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அஹ்சானுத்தீன் அமனுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அமர்வில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய அமர்வில் சபரிமலை உட்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகள் மற்றும் அரசியலமைப்பின் கீழ் மத சுதந்திரத்தின் வரம்புகள் குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவாதத்தின்போது நீதிபதி பி.வி. நாகரத்னா,“தென்னிந்தியாவில் ஒரு கோவில் சைவம், வைணவம் அல்லது ஸ்ரீ வைணவ வழிபாட்டு முறையைப் பின்பற்றினால், அந்த நடைமுறைகளின் அடிப்படையில் அது ஒரு “மத உட்பிரிவு’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு சைவ வழிபாட்டு முறையில், வைணவ முறைப்படிதான் வழிபாடு நடக்க வேண்டும் என்று வைணவர்கள் கோர முடியாது. அந்தந்த வழிபாட்டு முறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதற்காக ஒரு தனி அமைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு இந்து எந்தக் கோவிலுக்கும் செல்லலாம்.” என்று விளக்கினார்.