ஜப்பான் எப்போதுமே வித்தியாசமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன நாடு. இந்த ஆண்டு ஜப்பானில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப மயக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏசி, மின்விசிறி போன்ற வழக்கமான சாதனங்கள் பொது இடங்களிலும் திறந்தவெளிகளிலும் வேலை செய்பவர்களுக்குப் பயன்படாது. இதைக் கருத்தில் கொண்டு, மனிதர்களை விரைவாகக் குளிர்விப்பதற்காகவே ஒரு பிரத்யேகமான “கூல் கேபினை’, SDRS, ட்ருஸ்கோ ஆகிய ஜப்பானிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

டோ ஹியெமன் பாக்ஸ்’ (Do Hiemon Box) என அழைக்கப்படும் இந்தச் சாதனம், 7 அடி உயரமும், துருப்பிடிக்காத எஃகு மற்றும் கண்ணாடிக் கதவுகளாலும் ஆன ஒரு பெட்டி போன்ற அமைப்பு.
அதிக வெயிலில் வேலை செய்துவிட்டு வருபவர்கள், இந்தப் பெட்டிக்குள் சென்று உட்கார்ந்தால் வெறும் 5 முதல் 10 நிமிடங்களில் உடல் முழுமையாகக் குளிர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். பெட்டியின் உள்ளே ஒட்டுமொத்த வெப்பநிலையானது 15°C ஆகப் பராமரிக்கப்படும். அதே சமயம், தலை, கழுத்து, தோள்பட்டை, முதுகுப் பகுதிகளில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று நேரடியாக வீசும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.