இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அவர் உயிர் பிரிந்ததாக இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, இந்திய விளையாட்டு உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையின் போதே, ஜஸ்பால் ராணாவுக்கு நெஞ்சு வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை அமிலத்தன்மை (acidity) காரணமாக இருக்கலாம் என எண்ணி, அவர் தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். இந்தியா திரும்பும் விமானப் பயணத்தின்போதும் மீண்டும் இதே பிரச்னை ஏற்படவே, டெல்லி வந்திறங்கியதும் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “ஆரம்பத்தில் அவர் அந்த வலியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை,” என்று அவரது சகோதரர் சுபாஷ் ராணா சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
மருத்துவப் பரிசோதனையில், இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு “ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாட்கள் கழித்து இரண்டாவது ஸ்டென்ட் பொருத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவர் குணமடைந்து வருகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த செய்தி அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.
பயிற்சியாளராக ஜஸ்பால் ராணாவின் பங்களிப்பு இந்திய துப்பாக்கிச் சுடுதலில் மகத்தானது. குறிப்பாக, இளம் வீராங்கனை மனு பாக்கரின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த முக்கிய சக்தி அவர்தான். சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தபோது, அதன் பின்னணியில் இருந்த குரு ஜஸ்பால் ராணா. மனு பாக்கரை ஒரு ஒலிம்பிக் நாயகியாக செதுக்கிய பெருமை அவரையே சாரும்.
.jpg?q=75&auto=format%2Ccompress)
பயிற்சியாளராக மட்டுமல்லாமல், ஒரு வீரராகவும் ஜஸ்பால் ராணா படைத்த சாதனைகள் ஏராளம். காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில், இந்தியாவின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். 1994, 1998, 2002 மற்றும் 2006 என நான்கு தொடர்ச்சியான காமன்வெல்த் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தினார். 2006-ல் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் உலக சாதனையை சமன் செய்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது அவரது வாழ்வின் உச்சமாக பார்க்கப்படுகிறது. தனது 18-வது வயதிலேயே, 1994-ல் மிலனில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்று, உலக அரங்கில் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்தவர்.
ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை வழங்கிய ஜஸ்பால் ராணாவின் மறைவு, ஒரு சகாப்தத்தின் முடிவாகவே பார்க்கப்படுகிறது