மன்னார்குடி: `பிரமாண்டத்தை வீழ்த்திய எளிமை' – காமராஜிடம் டி.ஆர்.பி.ராஜா வெற்றியை பறிகொடுத்த பின்னணி!

Spread the love

மன்னார்குடி தொகுதியில் தி.மு.க-வில் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க-வைச் சேர்ந்த எஸ்.காமராஜ், நா.த.க-வில் இலரா.பாரதிச்செல்வன், த.வெ.க-வில் யு.வி.எம்.ராஜராஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் செல்வாக்கு படைத்த டி.ஆர்.பி.ராஜாவை தன் எளிமையால் வீழ்த்தி 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் எஸ்.காமராஜ். எந்த சூழ்நிலையிலும் மக்களிடமிருந்து விலகி நிற்காமல் மக்கள் பக்கம் நின்றால் நிச்சயம் அதற்குரிய பலனை மக்கள் கொடுப்பார்கள் என நெகிழ்ந்துள்ளார் எஸ்.காமராஜ்.

டி.ஆர்.பி.ராஜா – எஸ்.காமராஜ்

மூன்று முறை தொகுதியை தக்க வைத்திருந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை எதிர் கொண்டார். ஆனால் நான்காவது முறை போட்டியிட்ட டி.ஆர்.பி.ராஜா தரப்பு வெற்றிக்காக போட்ட சில கணக்குகள் தப்ப… தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஒரு பிரமாண்டத்தை எளிமை வீழ்த்தியிருப்பதாக தொகுதிக்குள் பேசுகிறார்கள்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், “மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். எஸ்.காமராஜ் இரண்டு முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆனாலும் எஸ்.காமராஜ் மக்களிடமான நெருக்கத்தை குறைத்துக் கொண்டதில்லை. எளிமை அவருக்கான அடையாளமாகவும் இருந்தது. யாரிடத்திலும் பாகுபாடு காட்ட மாட்டார். கோபப்பட மாட்டார். எவ்வித சூழலாக இருந்தாலும் எளிதாக அவரை சந்திக்கலாம். ஒரு முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டதையும் சேர்த்து மூன்று முறை தோல்வியைச் சந்தித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின் எஸ்.காமராஜ்

இது மக்கள் மத்தியில் அவருக்கான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருந்தது. டி.ஆர்.பி.ராஜா அமைச்சரான பிறகு பெரும்பாலும் தொகுதிக்குள் இருக்கமுடியவில்லை. அவர் நம்பிய சிலரின் நடவடிக்கை சொந்த கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதும் பாதகமானது. மன்னார்குடியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார் ராஜா. குறிப்பாக புதிய பேருந்து நிலையம், ரிங் ரோடு போன்றவற்றைச் சொல்லலாம். இதனால் நகரப் பகுதி தனக்கு கைகொடுக்கும் என்று நம்பினார். நகரப் பகுதியில் 6,000 வாக்குகள் லீடிங் வரும் எனவும் எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார், அமமுக நகரச் செயலாளர் ஆனந்தராஜ் இருவரும் இணைந்து செய்த வேலைகளால் எதிர்பார்த்தது நடக்காமல், காமராஜுக்கு சாதகமாக மாறியது.

எஸ்.காமராஜும் வெற்றி பெறக்கூடியவர் தான். சில சூழல்களால் வெற்றி கைக்கு எட்டாமல் போக… இப்போது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது. தோல்விக்குப் பிறகு டி.ஆர்.பி.ராஜா தனது முகநூல் பக்கத்தில், `இதுவரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டு வந்த பெருமையோடு நீண்ட நாள்களுக்குப் பிறகு உறங்கப் போகிறேன்’ என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் வருத்தமளிக்கிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ராஜாவின் பதிவு திமுக-வினரை வருத்தமடையச் செய்திருக்கிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *