India
-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. அந்த கட்சியின் 20 லோக்சபா எம்பிக்கள் தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது திரிபுராவை சேர்ந்த இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் இணைந்து பாஜகவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் தான் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார். இதையடுத்து அவரது கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் லோக்சபாவி்ல 20 எம்பிக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானும் அடங்குவார்.
லோக்சபாவில் மொத்தம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்பிக்கள் உள்ளனர். இதில் 20 பேர் மம்தா பானர்ஜி தலைமையின் மீது அதிருப்தியாகி தனி அணியாக மாறி உள்ளனர். 3ல் 2 பங்கு எம்பிக்கள் தனி அணியாக இருப்பதால் மம்தா பானர்ஜியால் தகுதி நீக்க நடவடிக்கை கோர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள் 20 பேரும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (Nationalist Citizen Party of India or NCPI) இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இது திரிபுராவை மையப்படுத்தி செயல்பட்டு வரும் தனி கட்சியாகும்.
இன்று காலையில் அதிருப்தி எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவைச் சந்தித்து பேசினர். அதன்பிறகு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை அவரது இல்லத்தில் சந்தித்த பேசிய நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்சி திரிபுராவை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது.
இந்த அதிருப்தி எம்பிக்கள் தாங்கள் தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்று மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி , உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என அங்கீகரிக்க கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தற்போது இந்திய தேசியவாத மக்கள் கட்சியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் மம்தா பானர்ஜியின் மிக நெருக்கமான ஆதரவாளரான சுதீப் பந்தோபாத்யாய, சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பூபேந்தர் யாதவை சந்தித்த பிறகு அதிருப்தியாளர்கள் குழுவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இது அந்த அதிருப்தி குழுவிற்கு இன்னும் வலுவை சேர்த்துள்ளது. இதற்கிடையே தான் வடக்கு கொல்கத்தா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சுதீப் பந்தோபாத்யாயவின் பதவியை மம்தா பானர்ஜி பறித்துள்ளார். இதுபற்றி அதிருப்தி எம்பிக்களை வழிநடத்தும் ககோலி கோஷ் தஸ்திதார் கூறுகையில், ”இன்னும் 2 எம்பிக்கள் எங்களுடன் இணைய உள்ளனர். இதனால் லோக்சபாவில் எங்களின் பலம் 22 ஆக அதிகரிக்கும்.
கட்சியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடன் வெளியேறும்போது, முதல் நாளே அதே கட்சியின் பெயரை கோர முடியாது. வரும் ஜூலையில் எங்களிடம் மூன்றில் இரண்டு பங்கை விட அதிகமான எம்பிக்கள் இருப்பார்கள். இதனால் அப்போது ‘திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரையே எங்களுக்கே வழங்க கோருவோம். அதன் பிறகு நீதிமன்றம் இது குறித்து முடிவெடுக்கும்” என்றார்.
மேலும் தற்போது அதிருப்தி எம்பிக்கள் தங்களை உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோராாமல் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி பெயரில் செயல்பட தயாரானது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியில் இருந்து அதிருப்தியாகி தனி குழுவாக செயல்பட்ட சட்ட ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். இதனை தடுக்கவே அவர்கள் தற்காலிகமாக இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர்.இதற்கிடையே தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ” திரிணாமுல் காங்கிரஸை ஒரே அரசியல் கட்சியாகக் கருத வேண்டும். கட்சியின் எந்தவொரு தனிக்குழு அல்லது பிரிவிற்கும் தனி அங்கீகாரமோ அல்லது சலுகைகளோ வழங்கக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கடிதத்தில் முக்கிய விஷயம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”அரசியல் கட்சிகள் ஒரே நேரத்தில் இரு குழுவாக பிரிந்து செயல்பட சட்டம் அனுமதிப்பது இல்லை. இதனை பல நீதிமன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்தி .ள்ளனர். சபாநாயகர் அரசியல் கட்சியையே அங்கீகரிக்கிறார், மாறாகப் போட்டியிடும் பிரிவுகளை அல்ல. இதனால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகள் தங்களை உண்மையான அரசியல் கட்சி என்று கோரும் போது, பத்தாவது அட்டவணையின் பிரிவு 2(1)-ன் கீழ் தகுதி நீக்க மனுக்களை விசாரிப்பதற்காக உண்மையான அரசியல் கட்சி எது என்பதை சபாநாயகரே முதல் முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தனி பிரிவினருக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது” என கூறப்பட்டுள்ளது.
இதனால் சட்ட சிக்கலில் சிக்கவிடக்கூடாது என்பதற்காக தற்போதைக்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள் இந்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். விரைவில் அவர்கள் 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவை காண்பித்து உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்று உரிமை கோர முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல், மம்தா பானர்ஜியின் ஆதரவாளரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மதன் மித்ரா கூறுகையில், ” அதிருப்தி எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டனர். மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் கட்சியை வலுப்படுத்தப்போவதாகக் கூறி, அவர்கள் திரிணாமுல் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டனர். இப்போது அவர்கள் அந்த வாக்குறுதியிலிருந்து விலகிவிட்டனர். இது துரோகம். இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது பற்றி மம்தா பானர்ஜி தான் முடிவெடுப்பார்” என தெரிவித்துள்ளார்.