மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு முக்கிய ஆதரமாக விளங்குகிறது. மயிலாடுதுறை ரயில் சந்திப்பினை அதிநவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ரயில் சந்திப்பாக உயர்த்தும் நோக்கில் “அம்ரித் பாரத்” திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, எஸ்கலேட்டர், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை, கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் ரூ.20 கோடி நிதியானது ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
புனரமைப்பு காரணமாக புதிய கழிவறைகள் கட்டப்பட்ட நிலையிலும், பழைய கழிவறைகள் அகற்றப்படாமல், பேருந்து நுழைவாயிலிலேயே இருந்து பேருந்துகள் வந்து செல்வதற்கு இடையூறாகவும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளன.
இது குறித்துப் பகுதி மக்களிடமும் பயணிகளிடமும் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “புதுசா பாத்ரூம் கட்டுனதும், பழச இடிச்சிடுறதா தான் சொன்னாங்க. ஆனால், புது பாத்ரூம் கட்டி ஆறு மாசம் ஆகிடுச்சு. இப்ப நாங்க பயன்படுத்துற பாத்ரூம் பஸ் ஸ்டாண்டுக்கு இடையூறாதான் இருக்கு. இதனால, வர பஸ் எல்லாம் பாத்ரூம்க்கு முன்னாடி நிக்குது, இல்ல பின்னாடி தான் நிக்குது. நடுவுல நந்தி மாதிரிதான் இந்த பாத்ரூம் இருக்கு. இப்படி இருக்குறதுனால, பஸ் எல்லாம் வந்து திரும்பவும் ரொம்ப சிரமமா இருக்கு. பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் நுழையிற பகுதியவே இந்த பாத்ரூம் அடைச்சு வச்சிருக்கு. முக்கியமான ரயில்கள் வரும்போது பயணிகள் கூட்டம், அதிக அளவிலான வாகனங்கள்னு கூட்ட நெரிசல் ஏற்படுது.