மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய்ய போதிய பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், அவற்றை நம்ப வேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர். மும்பை போன்ற நகரங்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுபவர்கள் அதிக அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு உள்ளூர் மொழியான மராத்தி தெரியாது.
ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் அந்த விதி பெரிய அளவில் பின்பற்றப்படுவது கிடையாது. டிரைவர்கள் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கிவிடுகின்றனர். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுவதில் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்தும், அவர்கள் மராத்தி கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதும் அரசின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்கிறதா என்பது குறித்த சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் அளித்த பேட்டியில், “‘மே ஒன்றாம் தேதியிலிருந்து ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களின் மராத்தி திறன் சோதிக்கப்படும். மாநிலம் முழுவதும் ஆர்.டி.ஒ அதிகாரிகள் இதற்கான சோதனையில் ஈடுபடுவார்கள். மராத்தி தெரிந்திருக்கவில்லையெனில், அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருக்கும் விதியைத்தான் அரசு அமல்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
அரசின் இந்த உத்தரவு ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. மராத்தி தெரியவில்லை என்பதற்காக லைசென்ஸை ரத்து செய்வது நியாயமற்றது என்றும் டிரைவர்களின் வாழ்வாதாரமாக லைசென்ஸ் இருக்கிறது என்றும் மும்பை டாக்ஸி யூனியன் தலைவர் சாலியன் தெரிவித்துள்ளார். சில டிரைவர்கள் கடன் வாங்கி ஆட்டோ மற்றும் டாக்ஸி வாங்கி இருப்பதாகவும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டால் கடனை கட்டமுடியாத நிலை ஏற்படும் என்றும் டிரைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மராத்தி போர்டு
இதே போன்று மும்பையில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மராத்தி பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள மலாடு போன்ற இடங்களில் கடைகளில் மராத்தியியில் பெயர் பலகை வைப்பதற்கு பதில் குஜராத்தியில் பெயர் பலகை வைத்துள்ளனர். இது குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதனால் குஜராத்தி பெயர் பலகையை மாற்றிவிட்டு மராத்தியில் வைக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.