மருத்துவக் குணங்கள் நிறைந்த அஸ்வகந்தா! ஆறு மாதங்களிலேயே லட்சங்கள் லாபம்….. – Kumudam

Spread the love

அவரது அனுபவத்தை வாசிக்கும் முன்பு அஸ்வகந்தாவின் ஜாதகத்தைப் புரட்டிப் பார்ப்போம்….

தரிசு நிலங்களில் அமோக சாகுபடி

மிகவும் குறுகிய காலத்தில் வளரும் மருந்து செடி வறண்ட, தரிசு நிலங்களில் நன்றாக வளரும். ஆனால், களிமண்ணில் நன்றாக வளராது, அஸ்வகந்தாவுக்கு வாரத்திற்கு ஒருமுறை நீர்பாய்ச்சினாலே போதும். அஸ்வகந்தாவின் வேர்கள் மருத்துவக் குணம் கொண்டவை. தோல் நோய்கள், வயிற்றுப்புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆண்களுக்கு வீரியத்தன்மையை அதிகரிக்கவும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யவும் மருந்தாகப் பயன்படுகிறது. நடவு செய்த 5 முதல் 6 மாதத்திற்குள் இதன் வேர்கள் அறுவடை செய்யப்படுகிறது.

இது இந்தியாவில் பயிர் செய்யப்படும் ஒரு முக்கியமான மருந்து பயிர். அஸ்வகந்தி என்று கன்னடத்திலும், அஸ்வகந்த் என்று ஹிந்தியிலும்,வின்டர் செர்ரி என ஆங்கிலத்திலும் இதை அழைக்கிறார்கள். வேதகாலத்திலேயே இதன் முக்கியத்துவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வித்தானின் மற்றும் சோமினிபெரின் என்ற இரண்டு வேதிப்பொருட்களே இதன் மருத்துவத் தன்மைக்குக் காரணம் இவை அதிகமாக வேர்ப்பகுதிகளில் இருந்து பெறப்படுகின்றன. இதன் இலைகள் வகையான வேதிப்பொருட்களை கொண்டுள்ளன மேலும் இதன் தண்டு பகுதியில் டேனின் மற்றும் பிளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு, பல்வேறு வேதிக்கூட்டுப் பொருட்களே காரணம்.

இந்தியாவில் விளையும் இரகம் 0.13 முதல் சதவீதம் வளர் வேதிக்கூட்டுப் பொருட்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஆப்பிரிக்கா ரகத்தின் வேர்களில் சிறிதளவு இளம் பழுப்புநிறம் காணப்படும் எளிதில் ஆவியாகக் கூடிய நறுமண எண்ணெய் இதிலிருந்து கிடைக்கிறது. இதன் பழங்களில் அதிக புரத சத்து உள்ளது.

சாகுபடி முறை

மதுரை அருகிலுள்ள துவரிமான் கிராமத்தில் முதன் முறையாக அஸ்வகந்தா விவசாயம் செய்து வரும் ராஜகோபால் ஐய்யரை சந்தித்தோம். அவர் நம்மிடம் அஸ்வகந்தா வளர்ப்பு, பயன்பாடு குறித்து ஆர்வமாகப் பேசினார். “அஸ்வகந்தா அதிகமாக கரிசல் அல்லது சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரும். முதல் தடவை உழவு செய்யும்போது ஆழமாக உழவு செய்ய வேண்டும். இரண்டு முறை புரட்டி போட்டு உழவு செய்யணும், களிமண் ஏரியாக்களில் விளைச்சல் செய்ய முடியாது என்று சொல்வார்கள், அதுபோன்ற இடங்களில் செம்மண் மற்றும் தேங்காய் நார் இரண்டையும் கலந்து அதை நிலத்தின் மேல் பரப்பி விதைகளைத் தூவி விட்டால் போதும் விளைச்சல் நன்றாக இருக்கும்.இந்தச் செடி அதிகபட்சம் முக்கால் அடி வரைக்கும்தான் செல்லும் இரண்டு பக்கமும் கரைபோல் அமைக்க வேண்டும்.

தண்ணீர் எளிதாக செல்லக்கூடிய வகையில் பாத்தி அமைக்க வேண்டும். அஸ்வகந்தா செடிகள் இருக்கும் பக்கவாட்டின் அகத்தி செடிகள் இருப்பதால் அதன் வேர்களில் இருந்து வரக்கூடிய நைட்சஜன் அஸ்வகந்தா செடிகளின் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. இதை யாரும் சொல்லவில்லை. என்னுடைய ஐடியாவாக அகத்தியை வளர்த்திருக்கிறேன். மகசூல் நன்றாக இருக்கிறது.

தட்பவெப்பநிலை

அஸ்வகந்தா அதிகமாக மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றாக வளரும். இது அதிகமாக பின் மழைபருவத்தில் பயிரிடப்படுகிறது. நல்ல வளர்ச்சிக்கு மிதமான வறண்ட வானிலை தேவைப்படுகிறது. இதன் வேர் வளர்ச்சிக்கு ஒன்று அல்லது இரண்டு மழை மட்டுமே போதும், முதல் மாதம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். அப்போது வேப்பம் புண்ணாக்குடன் வேப்ப எண்ணெய் கலந்து தண்ணீர் விட வேண்டும். இரண்டாவது மாதம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். மூன்றாவது மாதம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும்.

நேரடி விதைப்பு

மதுரையில் விதைகள் கிடைப்பதில்லை. வேடசந்தூரில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆஃப் வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் அலுவலகத்தில் கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு ஐந்து கிலோ விதை தேவை. விதை விதைக்கும்போது மணல் கலந்து விதைக்க வேண்டும். இங்கிருந்து வாங்கி வரும் விதைகள்தான் மதுரை மண்ணுக்கு செட்டாகிறது விதை விதைத்த 15 நாட்களில் முனைகட்டி இலை தெரியும். ஒரு மாதத்தில் ஒரு அடி வரைக்கும் இலையும் வளர்ச்சி இருக்கும். ஆறு மாதத்தில் வேர் பிடிக்கும். அதில் இருந்து காய்கள் வரும். அதன் பிறகுபழங்கள் சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

உரம்

அஸ்வகந்தாவிற்கு அதிகமாக உரம் போடத் தேவையில்லை. மத்திய பிரதேசங்களில் விளையும் அஸ்வகந்தாவிற்கு எந்தவித உரமும் போடுவதில்லை.

களை எடுத்தல்

நடவு செய்த 30 நாட்களில் ஒரு முறையும் அடுத்த 30 நாட்கள் இடைவெளியில் ஒரு முறையும் களை எடுக்கவேண்டும். நான் சொல்லியபடி உழவு செய்தால் சுனை என்பது இருக்காது. எனக்கு களை செடிகள் வந்ததில்லை.

பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு

அஸ்வகந்தாவில் பூச்சிகளின் தாக்குதல் குறைவு.

அறுவடை

வருடத்திற்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். நான் நவம்பர் மாதம் விதை விதைத்தேன்.ஏப்ரல் மாதம் அறுவடை செய்திருக்கிறேன். வேர் தண்டு நடுவிரல் கணம் இருக்கிறது. நல்ல விளைச்சல். மூன்று பிரிவாக தரம் பிரிக்கப்படுகிறது. இலை தமிழ்நாட்டில் வாங்குவதில்லை. வடமாநிலங்களில் இதன் இலையை பவுடர் செய்து அஸ்வகந்தாவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

வித்தானின் ஏ என்பது நோய் எதிர்ப்பு காரணியாகவும் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. இலையினால் செய்யப்பட்ட பசையானது கட்டிகளையும், சருமநோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. ராஜஸ்தானில் முடக்குவாதத்திற்கு மருந்தாக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பஞ்சாபில், குடல் புண்ணைக் குணமாக்க பயன்படுத்துகிறார்கள். இலையில் இருந்து பெறப்படும் கசாயம், குழந்தைகளுக்கு ஜீரணத்தைப் போக்கவும். உடல் வீக்கத்தைப் போக்கவும் குடிப்பவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும் பயன்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறு, மலட்டுத்தன்மை கருப்பைப் புழு ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுகிறது. இதன் வேர்களில் இருந்து பெறப்படும் பவுடர், பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய வல்லமை கொண்டது. இதன் வேர் கசாயம் கருப்பை புண்ணை போக்கக்கூடியது. இதன் வேர் கசாயத்துடன், மிளகு, திப்பிலி,வெண்ணெய் மற்றும் தென் (25 50.கி) அல்லது இதன் வேர் பவுடர் உடன் பால் சேர்த்து பருகினால் ஆண்களுக்கு வீரியத்தன்மை அதிகரிக்கும். இதன் இலைதழைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசையானது குதிரைகளில் ஏற்படும் புண்களையும் கட்டிகளையும் குணப்படுத்த உதவுகின்றது

சந்தைப்படுத்துதல்

அஸ்வகந்தா வேர்களை நன்றாக காயவைத்து அதன் பிறகு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இதற்கான சந்தை குறைவாக இருக்கிறது. ஒரு கிலோ முந்நூறு ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மத்திய பிரதேசத்தில் ‘நீமச்’ என்ற இடத்தில் இதற்கான மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இது தங்கம்போல் நாளுக்கு நாள் விலை ஏற்றம் இறக்கம் கொண்டது. இலைகளும், தண்டுகளும் மத்திய பிரதேசத்தில் விலைக்கு வாங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

லாபம்

ஒரு ஏக்கருக்கு இரண்டரை லட்சம் கிடைக்கும் நான் அறுபது சென்ட் நிலத்தில் விளைச்சல் செய்திருக்கிறேன். எனக்கு லாபமாக சுமார் 1.25 லட்சம் கிடைக்கும். தண்ணீர், வேலை ஆட்கள் கூலி போக ஆறு மாதத்தில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். அதிகம் லாபம் தரும் விவசாயமாக அஸ்வகந்தா இருக்கிறது. விவசாயிகள் பணப்பயிராக இதை விவசாயம் செய்யலாம்” என்று உரக்க சொல்கிறார் ராஜகோபால் ஐயர்.

உணவே மருந்து என்பதை நிருபிக்கிறது அஸ்வகந்தா!

எழுதியவர்- பாலா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *