நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ராமர் கோயில் ஊழல் விவகாரம், நீட் வினாத்தாள் கசிவு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை தொடங்கியவுடன் முடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் திமுக எம்.பி-கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய எம்.பி திருச்சி சிவா, “மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி எதிர்காலத்தில் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்து கொண்டது. பாசனப் பயனீட்டாளர்களின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி அணை கட்ட முனைகிறது கர்நாடகா.

இப்பிரச்னைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தும், அவைத்தலைவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
சமீப காலமாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்பதோ, அதற்கு விளக்கமளிப்பதோ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதனால் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள் பெயரளவில் மட்டுமே செயல்படும் சூழல் உருவாகியுள்ளது.